ஐபிஎல் 2024 ஏலம்.. சிஎஸ்கே கழட்டிவிட்டும் எல்லா டீமும் போட்டி போட வாய்ப்புள்ள 4 வீரர்கள்

0
13655

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகளுக்கு தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி தேதியாக நவம்பர் 26 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் 10 அணிகளும் தங்களது தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்களின் இறுதி பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வருடம் எடுத்த வீரர்களில் பலரையும் விடுவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. எனினும் அவர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெற மாட்டேன் என அறிவித்ததால் அவரை விடுவித்து இருக்கிறது. மேலும் தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான பிரிட்டோரியஸ் மற்றும் மகாலா ஆகியோரையும் விடுவித்து இருக்கிறது.

- Advertisement -

இவர்களைத் தவிர நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் அவர் காயம் காரணமாக ஒரு போட்டியிலும் பங்கு பெற முடியாத நிலையில் இந்த வருடம் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் தவிர இந்திய வீரர்களான சேனாபதி ஆகாஷ் சிங் மற்றும் பகத் வர்மா ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வருட ஏலத்திற்கு சென்னை அணி 31.4 கோடி ரூபாயுடன் செல்ல இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இவரது இடத்திற்கான வீரரை தேர்வு செய்வதில் சென்னை அணி முக்கிய கவனம் செலுத்தும் . இந்நிலையில் சென்னை அணியால் கழற்றி விடப்பட்ட 4 வீரர்களுக்கு இந்த வருட மினி ஏலத்தில் கடும் போட்டி நிலவும். அந்த வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

சிசண்டா மகாலா:
தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த பந்து வீச்சு ஆல்றவுண்டரான இவர் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் பங்கு பெற்ற இவர் ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான போட்டியின் போது காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து காயம் குணமாகி தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வந்த இவர் உலகக்கோப்பை அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணியுடன் ஆன ஒரு நாள் போட்டி தொடரில் மீண்டும் காயமடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகினார். இவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

டிவைன் பிரிட்டோரியஸ் :
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர் 6 விக்கெட் கைப்பற்றியதோடு 44 ரன்கள் எடுத்திருக்கிறார். சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி போன்ற ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் இவரை விடுவித்து இருக்கிறது. இந்த வருட ஏலத்தில் ஆல் ரவுண்டர் தேவைப்படும் அணிகள் நிச்சயமாக இவருக்கு போட்டி போடும். இதுவரை 210 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 172 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரது சிறப்பான பந்துவீச்சு 17 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றியது ஆகும். மேலும் 5490 ரண்களும் எடுத்திருக்கிறார் . டேட்டிங்கில் இவரது அதிகபட்சம் 77 ரன்கள்.

கைல் ஜெமிசன்:
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆன இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். எனினும் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்த வருட உலகக் கோப்பைக்கு முன்பாக முழு உடல் தகுதி பெற்று நியூசிலாந்து அணிக்கு மாற்று வீரராக உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த வருடம் சிஎஸ்கே அணி இவரை விடுவித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது முழு உடல் தகுதி பெற்று விளையாடி வருவதால் ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகாஷ் சிங்:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் கடந்த வருட ஐபிஎல் தொடரில் முகேஷ் சௌத்ரிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஏழு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர் சிஎஸ்கே அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இடது கை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் என்றுமே டிமாண்ட் அதிகம் என்பதால் நிச்சயமாக இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும்.