30.3 ஓவர்.. 117 பந்துகள் மீதம்.. புள்ளி பட்டியலில் இந்தியா அதிரடி.. 8வது முறையாக மாறாத வரலாறு.. பாகிஸ்தான் சோகம்!

0
1179
ICT

இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது ஆட்டத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மிகப் பெரிய போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கு வீசப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவது என முடிவு செய்தார். இந்திய அணியில் இசான் கிஷான் இடத்தில் சுப்மன் கில் மீண்டும் வந்தார். பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக விளையாடிய அதே அணியைக் கொண்டு களமிறங்கியது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து, அப்துல்லா ஷபிக் விக்கெட்டை 20 ரன்களில் இழந்தது. இதற்கு அடுத்து இமாம் உல் ஹக் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மேற்கொண்டு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பாபர் அசாம் 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து முகமது ரிஸ்வான் 69 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி ஒட்டுமொத்தமாக அப்படியே சரிந்தது. சவுத் சகில் 6, இப்திகார் அஹமத் 4, சதாப் கான் 2, முகமது நவாஸ் 4, ஹசன் அலி 12, ஹாரிஸ் ரவுவ் 2, ஷாகின் அப்ரிடி 2* ரன்கள் எடுத்தார்கள். முடிவில் 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் சர்துல் தாக்கூர் தவிர பந்துவீசிய பிரதான பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். முகமது சிராஜ் 7ஓவர்களுக்கு 50 ரன்கள் தந்து 2 விக்கெட், பும்ரா 7 ஓவர்களுக்கு 19 ரன்கள் தந்து 2 விக்கெட், குல்தீப் யாதவ் பத்து ஓவர்களில் 35 ரன்கள் மட்டும் தந்து மிடில் வரிசையில் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கில் நான்கு பவுண்டரிகள் அடித்து அதிரடியாக 16 ரன்கள் எடுத்து ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலியும் 16 ரன்களில் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் சர்மா 36 பந்துகளில் சதம் அடித்து நொறுக்கித் தள்ளினார். இறுதியாக 63 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த கேஎல்.ராகுல் 19, ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக இது மூன்றாவது வெற்றியாகும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை வென்றதில்லை என்கின்ற சோகமான வரலாறு அவர்களுக்கு தொடர்கிறது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 6 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 6 புள்ளிகள் உடன் நியூசிலாந்து இருக்கிறது. நான்கு புள்ளிகள் உடன் தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்திலும், இந்த தோல்வியின் மூலம் ரன் ரேட் மைனஸ்க்கு சென்று தற்காலிகமாக பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் தொடர்கிறது.