இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த வருட உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது .
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக உள்ளது. ஆனாலும் சில வீரர்கள் தங்களது சொந்த காரணங்களுக்காகவும் பெருகி வரும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவாகவே ஓய்வு பெற்று விடுகின்றனர். இதன் மூலம் அவர்களால் உலகெங்கிலும் நடைபெற இருக்கும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
ஒரு சில வீரர்கள் நல்ல பாரம் மற்றும் உடல் தகுதியுடன் இருந்தும் தங்களது டி20 எதிர்காலம் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் பங்கேற்பதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும் ஓய்வு பெற்ற மூன்று வீரர்களை பற்றி பார்ப்போம்.
ட்வயன் பிரிட்டோரியஸ்:
தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு ஆள் ரவுண்டரான இவர் இந்த வருடம் ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் போட்டி தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு தற்காலங்களில் ஒரு நிலையான ஆல்ரவுண்டர் இல்லாத சூழ்நிலையில் ட்வயன் பிரிட்டோரியஸ் அணியில் இடம் பெற்று இருந்தால் இந்த உலகக் கோப்பையில் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும். அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதால் இந்திய ஆடுகளங்களை பற்றிய அவரது அனுபவம் தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் ஹேல்ஸ்:
இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் நீண்ட நாள் தடைக்குப் பிறகு கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்றார். மேலும் இங்கிலாந்து அணி 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சமீபகாலமாக சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் பேட்டிங்க்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இவரது அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும். இவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உலகக்கோப்பை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோன் பின்ச்:
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தினார். அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வர இறுதிப் போட்டிகள் வரை தகுதி பெற்றது. மேலும் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து பார்மில் ஏற்பட்ட சறுக்கல் மற்றும் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணியின் படுதோல்வி ஆகிய காரணங்களால் அனைத்து கிரிக்கெட் வடிவங்களில் இருந்தும் கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வை அறிவித்தார். தற்போது இவர் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது கிரிக்கெட் அனுபவம் மற்றும் இந்திய ஆடுகளங்களை பற்றிய புரிதல் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும்.
இந்த வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் மற்றும் இந்திய ஆடுகளங்களை பற்றி அவர்களின் புரிதல் அவர்களது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும். ஆனாலும் உலகக்கோப்பை நடைபெற இருக்கும் ஆண்டில் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அவர்களது நாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.