டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் ராகுல் டிராவிட்க்கு பதிலாக இந்திய அணி முயற்சிக்க வேண்டிய 3 பயிற்சியாளர்கள்

0
339
Ravi Shastri and Justin Langer

இந்திய அணிக்குத் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வந்ததில் இருந்து விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஜஸ்ப்ரீட் பும்ரா பல கேப்டன்களோடு பணியாற்றிவிட்டார். இது எந்தப் பயிற்சியாளர்களும் விரும்பாத ஒன்று.

அடுத்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு நல்ல முறையில் அமைந்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகள் அவருக்குச் சிறப்பாக அமையவில்லை. செளத் ஆப்பிரிக்காவில் தொடரை இழந்தது, இங்கிலாந்தில் இப்போது தோற்றது என வெளியில் சரிவாகவே இருக்கிறது. உள்நாட்டில் ஓரளவிற்கு இருந்தாலும், அடுத்து ஆஸ்திரேலிய அணி இங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாட வரும்போதுதான் இதுவும் தெரியும்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் அணிக்குத் தனி கேப்டன் என்பது போலவே, தனிப் பயிற்சியாளரையும் நியமித்து, பிரன்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ், அதிரடியாய் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி அபாரமான வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த நடைமுறை எல்லா அணிகளுமே பின்பற்ற தகுந்த மாதிரியே இருக்கிறது. இதனால் தனிப்பட்ட பயிற்சியும், ஆட்ட அணுகுமுறைகளும் அமையும். பயிற்சியாளர்களும் அதிக நாள் அணியோடே இருக்க வேண்டியதில்லை. அவர்களது பணிச்சுமையும் குறைக்கப்பட்டு, புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். தற்போது இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பதிலாகப் பயிற்சியாளராக யார் வந்தால் சிறப்பாக அமையலாம்? என்று மூன்று பயின்சியாளர்களைப் பற்றியே இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

ரவி சாஸ்திரி :

2017ஆம் ஆண்டு இந்திய அணியின் டைரக்டராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி 2019ஆம் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்த விலகியதை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மேலும் ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணில் வைத்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றது. இன்று இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா இருப்பதற்கு ரவி சாஸ்திரிதான் முக்கியக் காரணம். இவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க சம்மதித்தால், தாராளமாகக் கொண்டு வரலாம். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் வகுத்த மிடில் அன்ட் லெக் ஸ்டம்ப் லைன் பந்துவீச்சு வியூகம் இவரது திறமைக்கான சாட்சி!

- Advertisement -
ஜஸ்டின் லாங்கர் :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பொற்காலமான 2000ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரரான இவர், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் செளத் ஆப்பிரிக்காவில் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பால்-டேம்பரிங் செய்து சிக்கியதை அடுத்து, பெரிய நெருக்கடியில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியை, மெல்ல மெல்ல மீட்டெடுத்து, டி20 உலகக்கோப்பையையும், ஆஷஸ் தொடரையும் பயிற்சியாளராகச் செயல்பட்டு கைப்பற்ற வைத்தவர். பயிற்சியில் கடுமையான முறைகளை இவர் கையாண்டதாய் கூறி, ஆஸ்திரேலியா வீரர்கள் சிலர் இவரிடம் முரண்பட, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நல்ல கிரிக்கெட் அறியுள்ள, கடினமாக உழைக்கக்கூடிய கண்டிப்பான பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரும் நல்ல தேர்வாகவே இருப்பார்.

சந்திரகாந்த் பண்டிட் :

இவர் 1986-92ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 36 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர். மத்தியப் பிரதேச அணியை கேப்டனாக இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றவர். இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி போட்டி தொடரில், விதர்பா, மும்பை, மத்தியப் பிரதேஷ் என மூன்று அணிகளை பயிற்சியாளராக வழிநடத்தி சாம்பியனாக ஆக்கி இருக்கிறார். கோப்பை வேண்டுமென்றால் சந்திரகாந்தை அணுகலாம் என்ற அளவிற்குப் பயிற்சியாளராகப் புகழ் பெற்றவர். தற்போது 60 வயதான சந்திரகாந்த் இந்திய மைதானங்களை நன்கு அறிந்தவர் என்பதும், இந்தியர் என்பதால் இந்திய வீரர்களோடு எளிதாய் கலந்து புரிந்துணர்வை உருவாக்கி செயல்படவும் முடியும். இந்தியர் ஒருவர் பயிற்சியாளராக வேண்டுமென்று விரும்பினால், ரவி சாஸ்திரிக்கு அடுத்து இவர் சரியான தேர்வாக இருப்பார்!