டி20 உலக கோப்பை 2024.. வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு.. பிராவோ சொன்ன காரணம்

0
201

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதற்காக இவ்விரு நாடுகளும் மைதானங்களை முழு வீச்சில் தயார் செய்து வருகின்றனர். அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் உலகக்கோப்பை ரேஸில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் டி20 போட்டியைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் ஆபத்தான அணியாகக் கருதப்படுகிறது. அந்நாட்டு வீரர்கள் உலகின் எந்த லீக் தொடரிலும் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

- Advertisement -

டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முதல் இறுதி ஆட்டக்காரர் வரை அதிரடிக்கு பெயர் போனவர்கள். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த 12 மாதங்களில் மிகச்சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற இரு உலகக் கோப்பைகளில் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பிராவோ. 2024 உலகக் கோப்பை குறித்துப் பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஏற்ற இறக்கங்களை ஒப்புக்கொண்டு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

“வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமீபத்திய டி20 செயல்பாடுகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையேயான டி20 வெற்றிகள் அவர்களது உலகக் கோப்பைத் தகுதியை அதிகரித்திருக்கிறது. ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் கடந்த 12 மாதங்களில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த முறை உலக கோப்பையை வெல்ல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்கள் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கடந்த சில வருடங்களைக் காட்டிலும் தற்போது உள்ள அணி சிறந்த அணிகளில் ஒன்றாக நான் பார்க்கிறேன். அணி வீரர்கள் இம்முறை சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தற்போதைய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர். சுழற் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர். அவரின் நீண்ட கால அனுபவம் மற்றும் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் ஆகியவை அணிக்கு ஒரு நல்ல விஷயமாகும். மேலும் இங்குள்ள சூழ்நிலை அவருக்கு மிகவும் பழகிப்போனது என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான வெற்றிகளைக் குவிக்க இங்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறி இருக்கிறார்.