2024 ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் துபாய்க்கு செல்கிறதா? – ஐபிஎல் சேர்மன் பதில்

0
58
IPL2024

இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் காலம் என்கின்ற காரணத்தினால், ஐபிஎல் தொடருக்கு முதல் 21 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணைய அறிவிப்பு வந்த பிறகு, அதை வைத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் மீதி ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு இதேபோல இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்த காரணத்தினால், அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா காலத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்கள் யுனைடெட் அரபு எமிரேடில் வைத்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கு அதிக அளவு காவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்கின்ற காரணத்தினால், ஐபிஎல் தொடருக்கு பாதுகாப்புக்கு காவலர்களை கொடுப்பதில் பெரிய சிக்கல் எப்பொழுதும் இருக்கும். இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பல வெளிநாட்டு வீரர்கள் வந்து பங்குபெறும் தொடரில் பாதுகாப்பில் சமரசம் செய்து தொடரை நடத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனின் இரண்டாவது கட்டப் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் காலையிலிருந்து வந்து கொண்டிருந்தது. குறிப்பாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் இது குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக துபாய் சென்று இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

மேலும் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளின் வீரர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி சேகரிப்பதாகவும், ஐபிஎல் தொடரில் இரண்டாம் கட்ட போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறும் பொழுது, விசா பிரச்சனைகளை தவிர்க்க முன்கூட்டியே வேலைகளில் இறங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் கூறும் பொழுது “நாங்கள் அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். பொதுத் தேர்தல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், நாங்கள் அதற்கு அடுத்து ஐபிஎல் தொடருக்கான அடுத்த திட்டத்தைக் கண்டுபிடிப்போம். மேலும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடக்கும். அது வேறு எங்கும் செல்லாது” என உறுதியாகக் கூறியிருக்கிறார்