இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பதற்கு அதிகப்படியான சாத்தியத்தில் இருந்தவர் ரிஷப் பண்ட்.
இவர் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தற்பொழுது மறுவாழ்வில் இருக்கின்ற காரணத்தினால், இஷான் கிஷான், கேஎல்.ராகுல், சஞ்சு சாம்சன், கே.எஸ்.பரத் என இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களின் நீளம் அதிகமானது.
இந்த வரிசையில் கடைசியாக வந்தவர் விதர்பா மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா.
பேட்டிங்கில் கீழ் வரிசையில் வந்து அதிரடியாக விளையாடுவதில் இவர் சிறப்பானவர். மேலும் மிகப்பெரிய ஷாட்களை களத்தில் வந்ததும் அடிப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கக்கூடியவர். எவ்வளவு அதிரடியாக விளையாடினாலும் பேட்டிங்கில் துல்லியத்தை இழக்காதவர்.
இப்படியான காரணங்களால் இவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. மேலும் இவர் கீழ் வரிசையில் விளையாட கூடியவர் என்பதால், டி20 உலகக்கோப்பை அணியிலும் இவருக்கு இடம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் மேல் வரிசையில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.
இதனால் இஷான் கிஷான் டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. அப்படியே இடம் பெற்றாலும் விளையாடும் அணியில் ஜிதேஷ் ஷர்மா விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.
அவர் போட்டிக்கு தயாராவது குறித்து கூறுகையில் “நான் விளையாடுவதை மிகவும் ரசிக்கிறேன். ஐபிஎல் தொடர் சர்வதேச போட்டிகள் விளையாடுவதற்கு நிறைய உதவியாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் என்ன அழுத்தம் இருக்கிறதோ, அதே அழுத்தம்தான் சர்வதேச போட்டியிலும் இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகள் எளிதாகி விட்டன.
நீங்கள் இதேபோன்ற அழுத்தத்தை, சூழ்நிலையில் ஏற்கனவே இருந்திருப்பீர்கள் என்றால், உங்களுக்கு அது அடுத்து நடக்கும் பொழுது பழகிய ஒன்றாக இருக்கும். இந்த வகையில் ஐபிஎல் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறது. எனக்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது!” எனக் கூறியிருக்கிறார்!