2022 டி20 உலகக் கோப்பைக்கு முன் நாடு மாற வாய்ப்புள்ள 2 வீரர்கள்

0
1333
Tim David

தங்கள் அணியை பலப்படுதுவதற்காக மற்ற நாடுகளில் இருந்து வீரர்களை அழைத்து தங்கள் நாட்டிற்காக ஆட வைப்பது புதிதல்ல. அதில் இங்கிலாந்து அணி முன்னோடி. 2019 உலகக் கோப்பைக்கு முன் மேற்கிந்திய வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை அணிக்குள் சேர்த்து வேகப் பந்துவீச்சை பலப்படுத்தினர். இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்து அணிக்காக சிறப்பான சூப்பர் ஓவர் வீசி கோப்பையை வெல்ல உதவினார். சூப்பர் ஒவர் வரை அழைத்துச் சென்ற ஸ்டோக்ஸ், எதிரணியான நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர். மேலும், கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கனும் அந்நாட்டு வீரர் இல்லை. அவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

இது போல பலர் நாடு விட்டு நாடு தாவி ஐசிசி தொடரில் பங்கேற்றுள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதற்கு முன் நடந்த ஐசிசி தொடர்களைப் போல 2022 டி20 உலகக் கோப்பைக்கும் ஒரு சில வீரர்கள் நாடு மாற உள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

டிம் டேவிட்

இரண்டு நாட்களுக்கு முன் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் டிம் டேவிட்டை வாங்கி அணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அவர்கள் இதைச் செய்தால் கூட அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய ஓர் வீரர். மிக முக்கியமாக பினிஷிங்கில் வல்லவரான இவர் கடைசி நேரத்தில் இமாலய சிக்ஸர்கள் விளாசி அணியின் ஸ்கோரை ஒரே அடியாக உயர்திவிடுவார்.

உலகில் நடக்கும் பல்வேறு டி20 தொடர்களில் அவர் இதைத் தான் சிறப்பாக செய்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பிரம்மாண்ட சிக்ஸர்கள் விலாசியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஏற்கனவே பிக் பேஷ் லீகில் விளையாடியதால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆடிய அனுபவத்தை இவர் பெற்றிருக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் நம்பர் 5 அல்லது 6 இடங்களில் இவர் சரியான தேர்வாக இருப்பார்.

மைக்கல் ரிப்பன்

2022 டி20 உலகக் கோப்பைக்கு முன் நாடு மாறவுள்ள மற்றொரு வீரர் மைக்கல் ரிப்பன். தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவருக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன் நெதர்லாந்து நாட்டில் இருந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.

- Advertisement -

மைக்கல் ரிப்பன், இடது கை ஸ்பின்னர். மேலும் பேட்டிங்கிலும் அவ்வப்போது ரன்கள் சேர்ப்பார். ஐசிசி தொடரில் பங்கேற்கும் அணியில் இது போன்ற வீரர்கள் இடம்பெறுவது அவசியம். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் மைக்கல் ரிப்பனை விரைவில் நியூசிலாந்து அணியில் காணலாம்.