ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20, மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்து சிறப்பாக விளையாடியிருக்கிறது.
ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட்
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்திருந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சீன் வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி 154 ரன்கள் குவித்து 10 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் வெளியேறினார். அதற்குப் பின்னர் கேப்டன் ஏர்வின் மற்றும் பிரியன் பென்னட் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இதில் கேப்டன் எர்வின் 176 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். மற்றும் பிரியான் பென்னட் 124 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 110 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் இருக்க மற்ற வீரர்கள் தனது பங்குக்கு ஓரளவு விளையாடியதால் 135.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 586 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
ஜிம்பாப்வே அணி சிறப்பான சாதனை
மூன்று வீரர்களின் அபார சதம் ஜிம்பாப்வே அணி சிறப்பான ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் கஜன்ஃபார் மட்டுமே அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அடல் 3 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் அப்துல் மாலிக் மற்றும் ரஹமத் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தப்பு விராட் கோலி மேல இல்ல.. என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்.. ஆஸி 4வது டெஸ்ட் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
மாலிக் 21 ரன் மற்றும் ரஹமத் 32 ரன் குவித்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன் எடுத்திருக்கும் நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் வெற்றி வாய்ப்பு ஜிம்பாப்வே அணியின் பக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






