இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஜிம்பாப்வே அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சில முக்கியமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய ஜிம்பாப்வே அணி எட்டு ஓவர்களில் 63 ரன்கள் குவித்து தங்களது முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 46 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.
பின்னர் வெற்றி இலக்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 93 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் கில் 39 பந்துகளை எதிர்கொண்டு 58 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணியின் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்த தோல்வி குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஆன சிக்கந்தர் ராசா கூறும் பொழுது “ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் விளையாடிய விதத்தை பார்த்தால் 180 ரன்கள் அடித்திருந்தாலும் கூட போதுமானதாக இருந்திருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே வருகிறோம்.
கடைசி ஐந்து ஓவர்களில் 8 முதல் 10 ரன்கள் அதிகமாக சென்று விட்டது. ஆடுகளத்தில் சிறிது பவுன்ஸ் இருந்தது. எனவே இன்னிங்ஸ் தொடக்கத்தில் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி விளையாட வேண்டிய தேவை இருந்தது. இன்னிங்ஸ் இடைவெளியில் ஹெவி ரோலரை விக்கெட்டில் பயன்படுத்தியதால் அது எதிரணிக்கு சுதந்திரம் அளித்து பேட்டிங் செய்வதற்கு ஒரு அழகான விக்கெட் ஆக மாறியது. மேலும் நாளை ஒரு போட்டி மீதம் உள்ளது. இந்தத் தொடரில் 3-2 என்று தோற்றாலும் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கலாம்” என்று சிக்கந்தர் ராசா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் அபிஷேக் ஓபனிங் வருவார்களா?.. வேலை இன்னும் முடியல அதை முடிக்கணும் – சுப்மன் கில் பேட்டி
நாளை இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நடைபெற உள்ளது இந்திய அணியின் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா? அல்லது ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றியோடு இந்தத் தொடரை முடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.