இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா, ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்யும் தனது புதிய பொறுப்பு குறித்தும், பேட்டிங் அப்ரோச் மாறியது குறித்தும் விரிவாகப் பேசி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் துணைக்கேப்டன் திலக் வர்மா, தான் முன்பை விட தற்போது ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்கும்போது எந்த மாதிரியான மைண்ட்செட்டுடன் விளையாடுகிறேன் என்பதைத் தெரிவித்துள்ளார். தொடக்க காலத்தில் மூன்றாவது வரிசையில் விளையாடி வந்த இவர், கடந்த சில மாதங்களாக மிடில் ஆர்டரில் அணிக்குத் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து திலக் வர்மா பேசும்போது “என்னிடம் ஏற்கனவே பவர் கேம் இருந்தது; நான் மூன்றாவது இடத்தில் களமிறங்கியபோதும் ரன்கள் அடித்துள்ளேன். இப்போது ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது, முதல் பந்தே அடிப்பது போல் அமைந்தால் மட்டுமே பவுண்டரி அடிக்க நினைப்பேன். இல்லையென்றால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவேன். நான் சிறிது கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறேன். ஆரம்பத்தில் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் எடுப்பதிலும், ஃபோர்ஸ் அல்லது இரண்டு ரன்களுக்கு கேப் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
முன்பு மூன்றாவது இடத்தில் ஆடும்போது இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. ஆனால் தற்போது லோயர் ஆர்டரில் இறங்குவதால், நிலைமைக்கு ஏற்ப அடித்து ஆடுவதோடு, சில சமயம் நிதானமாகச் சென்று மேட்சை கடைசி ஓவர் வரை கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்துகிறார்.
அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, பவுலர்களின் மீது பிரஷர் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த அதிரடியான மற்றும் புத்திசாலித்தனமான அப்ரோச் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.