பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!

0
9841
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் ஜிம்பாவே பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஒன்று நடைபெற்று முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே மிக தைரியமாக முதலில் பேட் செய்வது என அறிவித்தது. அதற்கேற்றார் போல் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆரம்பித்தார்கள். ஆனாலும் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களின் அதிரடி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், பாகிஸ்தானின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களிடம் எடுபடவில்லை.

- Advertisement -

ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ் 28 பந்துகளில் 31 ரன்களை மூன்று பவுண்டரிகளுடன் அதிகபட்சமாக அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதை அடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆஸம் 4, முகமது ரிஸ்வான் 14, இப்திகார் 5, சதாப்கான் 17, ஹைதர் அலி 0, ஷான் மசூத் 44, முகமது நவாஸ் 22, முகமது வாசிம் 12, ஷாகின் அப்ரிடி 1 என ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இந்திய அணி உடன் தோல்வியை சந்தித்து இருந்த பாகிஸ்தானுக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். இந்த தோல்வியின் மூலம் ஏறக்குறைய பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்திருக்கிறது என்றே கூறலாம்.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு பதினோரு ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் முகமது நவாஸ் மூன்று ரன்கள் எடுக்க, இரண்டாவது பந்தில் முகமது வாசிம் பவுண்டரி அடிக்க, நான்கு பந்துகளுக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், முகமது வாசிம் ஒரு ரன் எடுக்க, மூன்று பந்துகளுக்கு மூன்று ரன்கள் வேண்டும் என்ற நிலை வர, முகமது நவாஸ் ஒரு பந்தை அடிக்காமல் விட்டு அடுத்த பந்தில் ஆட்டமிழக்க, ஒரு பந்துக்கு மூன்று ரன்கள் என்ற நிலையில் பேட் செய்ய வந்த ஷாஹீன் அப்ரிடி ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிய, பாகிஸ்தான் அணி பரிதாபமாக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது!

- Advertisement -