யுவராஜ் சிங்குடன் நடந்த முப்பது நிமிட உரையாடல் குறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசியிருக்கிறார். யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த பிறகு தனது பேட்டிங் சிக்கல்கள் மற்றும் மனநிலை மாற்றம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
சில இன்னிங்ஸ்களில் ரன்கள் குவிக்கத் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி, தனது தன்னம்பிக்கையை மீட்டெடுக்க அனுபவ ஆலோசனையை நாடினார். ஆடுகளத்தின் தன்மையைக் கவனித்து, தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது, “நேற்று நான் நான்கு பேரிடம் மட்டுமே பேசினேன். நிச்சயமாக என் தந்தை, என் சிறுவயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா, யு-19 அணியில் என்னுடன் இருந்த நண்பர் பிரதாம் ஜாச்சக், நான்காவதாக யுவராஜ் சிங். என் பேட்டிங் குறித்து அவரிடம் சுமார் அரை மணி நேரம் பேசினேன், ஏனெனில் நான் மிகவும் கலக்கத்தில் இருந்தேன். விக்கெட்டில் பேட்டிங் செய்யச் செல்லும்போது நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அவரிடம் வெளிப்படையாகப் பேசினேன். அவர் எனக்கு எல்லாவற்றையும் மிக நன்றாக விளக்கினார். நான் 20 பந்துகள் விளையாடினால் ஸ்கோர் வித்தியாசமாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார்” என்று ஆரம்பித்து வைபவ் சூர்யவன்ஷி கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது, “சில தொழில்நுட்ப விஷயங்களையும் அவர் எனக்கு விளக்கினார், அது இன்று எனக்குப் பெரிதும் உதவியது. கடந்த இரண்டு ஆட்டங்களில் நடந்தவற்றிற்குப் பிறகும், அதற்கு முன்பும் ஒரு உள்ளூர் போட்டியில் நான் ரன்கள் எடுக்காததால் என் மனம் சற்று திசைதிரும்பியிருந்தது. என்ன நடக்கிறது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் யுவி சாரிடம் பேசினேன். அவர் என் ரோல் மாடல், உங்கள் ரோல் மாடலிடம் பேசும்போது அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்பீர்கள். அவர் சில குறிப்பிட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டினார்” என்று ஆரம்பித்து வைபவ் சூர்யவன்ஷி கூறி இருக்கிறார்.
இறுதியாக வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது, “பிறகு என் பேட்டிங் வீடியோக்களைப் பார்த்தபோது நான் அந்தத் தவறுகளைச் செய்து கொண்டிருந்தது எனக்குப் புரிந்தது. இன்று அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமலும், அவர் சொன்ன ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைச் செயல்படுத்தவும் முயற்சித்தேன். அது எனக்கு உதவியது. அகமதாபாத்தில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு நான் பேட்டி அளித்தபோதும் கூட, என்னால் மூன்று ஃபார்மட்களிலும் விளையாட முடியும் என்று கூறியிருந்தேன். சூழலுக்கு ஏற்ப என் ஆட்டத்தை என்னால் மாற்ற முடியும். என் ஆட்டத்தின் மீது எனக்கு அந்த அளவு கட்டுப்பாடு உள்ளது. கடந்த இரண்டு ஆட்டங்களில் அது நீண்ட ஃபார்மட் என்பதால் நான் நீண்ட நேரம் விளையாட முயற்சித்தேன். இன்றும் எனக்கு அதே மனநிலைதான் இருந்தது. ஆனால் விக்கெட்டைப் பார்த்த பிறகு, நான் ஷாட்கள் விளையாட முயற்சிக்கும்போது பந்து பேட்டிற்கு நன்றாக வருவதை உணர்ந்தேன். அதனால் என் பலத்தின் மீது நம்பிக்கை வைத்தேன்” என்று ஆரம்பித்து வைபவ் சூர்யவன்ஷி கூறி இருக்கிறார்.