இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இதற்கு அவருடைய மெண்டராக இருந்து வரும் யுவராஜ் சிங் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் வெறும் 53 பந்துகளை மட்டுமே சந்தித்து 13 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டர்கள் உடன் 135 ரன்கள் அபிஷேக் சர்மா குவித்தார். இதன் மூலம் பல சாதனைகளை படைத்தார். இந்திய அணியை தனி ஒரு வீரராக போட்டியில் வெற்றி பெற வைத்தார்.
அபிஷேக் சர்மாவின் மென்டர்
இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பயிற்சி கொடுத்து வழி நடத்தி வருகிறார். கோவிட் காலங்களில் யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவை சிறந்த முறையில் தயாரித்தார். அங்கிருந்து வெளிவந்த அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகச் சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடியிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் போட்டியில் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். பிறகு தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக கொடுத்த வாய்ப்பை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
யுவராஜ் சிங் முதல் முறை வாழ்த்து
யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மா குறித்து எப்பொழுது டிவிட் செய்தாலும் அதில் ஏதாவது சின்னதாக கடிந்து கொள்வார். ஆனால் இந்த முறை யுவராஜ் சிங் அனுப்பி உள்ள வாழ்த்தில் “அபிஷேக் ஷர்மா நன்றாக விளையாடினாய். இப்படிதான் உன்னை பார்க்க விரும்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 140-150 கிமீ வேக பந்தை.. நான் எதிர்கொள்ளும் விதம் இப்படித்தான்.. யுவி பாஜிக்கு அதை செய்யணும்னு ஆசை – அபிஷேக் ஷர்மா
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் சர்மா பேசும்பொழுது “யுவராஜ் பாஜி ஒரு செப்பல் உனக்கு அனுப்புகிறேன் என்று குறிப்பிடாமல் ட்விட் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். அவர் என்னைப் பற்றி பெருமைப்படுகிறார். நான் இதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி இருக்கிறார்.