2027 ODI உலகக்கோப்பை: போட்டிகள் நடைபெறும் 12 மைதானங்கள் அறிவிப்பு.. 3 நாடுகளில் கிரிக்கெட் திருவிழா

0
0

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகள் இப்போதே வேகம் பிடித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்த தொடருக்காக மொத்தம் 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 8 மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ், பிரிட்டோரியாவின் செஞ்சூரியன், கேப் டவுனின் நியூலேண்ட்ஸ், டர்பனின் கிங்ஸ்மீட் ஆகிய பிரபல மைதானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதோடு கெபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் பார்க், ப்ளூம்ஃபொன்டைனின் மங்காங் ஓவல், ஈஸ்ட் லண்டனின் பஃபலோ பார்க் மற்றும் பார்லில் உள்ள போலண்ட் பார்க் ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

- Advertisement -

ஜிம்பாப்வே, நமீபியாவில் தலா இரண்டு மைதானங்கள்

ஜிம்பாப்வேயில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய இரண்டு மைதானங்கள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. நமீபியாவில் விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் கிரவுண்ட் மற்றும் யுனைடெட் கிரிக்கெட் கிளப் மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் மூன்று நாடுகளையும் சேர்த்து மொத்தம் 12 மைதானங்கள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துகின்றன.

2023 உலகக்கோப்பையில் 10 அணிகள் விளையாடிய நிலையில், 2027 தொடரில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போட்டியை நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன; ஆனால் நமீபியா தகுதிச் சுற்று மூலமாகவே உலகக்கோப்பைக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். மற்ற அணிகளும் ஐசிசி ஒருநாள் தரவரிசை மற்றும் தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

- Advertisement -

14 அணிகள் பங்கேற்பதால் 2027 உலகக்கோப்பை முந்தைய தொடரைவிட பெரிய அளவில் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற மைதானங்கள் முதல் ஜிம்பாப்வே, நமீபியாவின் மைதானங்கள் வரை வெவ்வேறு சூழலில் அணிகள் விளையாட வேண்டியிருக்கும். 12 மைதானங்கள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த போட்டி எந்த நகரத்தில் நடைபெறும் என்ற முழு அட்டவணை மீதுதான் அடுத்த எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -