“அடுத்து புள்ள பூச்சியை அடிச்சு நடந்த எல்லா தப்பையும் மறைக்க போறாங்க!” – சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

0
845
Gavaskar

இந்திய அணி ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி பொறுப்புக்குப் பின் ஐசிசி தொடர்களில் வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது!

தற்பொழுது ரோகித் சர்மா கேப்டன்சியில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி தொடர்ந்து தடுமாறியே வருகிறது. இதனால் அதிகப்படியான விமர்சனங்கள் வெளியில் இருந்து வருகின்றன.

- Advertisement -

கடைசியாக இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் வைத்து ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோற்று இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தவறவிட்டது.

மோசமாக விளையாடி தோற்று பட்டத்தை இழப்பது வேறு. ஆனால் இந்திய அணி நிர்வாகம் விளையாடுவதற்கு சரியான அணியைத் தேர்ந்தெடுக்காமல் தோற்றது மிகப்பெரிய விமர்சனமாக உருவெடுத்தது.

இந்த நிலையில் தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டிஸ் நாட்டுக்குச் செல்கிறது. இது முடிந்தால் அடுத்து டிசம்பர் மாதம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த நூற்றாண்டில் இருந்த அளவுக்கு வலிமையாகத் தற்போது கிடையாது. அவர்கள் உலகக்கோப்பைக்காகத் தகுதி சுற்றில் ஜிம்பாபேயில் விளையாடி வருவதில் இருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். இப்படியான தொடருக்கு இன்னும் சில இளம் வீரர்களை தேர்வு செய்து இருந்தால் அது அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும்.

இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட தவறிய சீனியர் வீரர்களையே இந்தத் தொடருக்கும் அழைத்துச் செல்வதில் எந்தப் பயனுமே கிடையாது.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் என்ன கற்றுக் கொள்ளப் போகிறது? இந்த சீனியர் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸில் ரண்கள் அடித்து விக்கெட் எடுப்பதால் என்ன நடந்து விடப் போகிறது. அவர்களின் தனிப்பட்ட புள்ளி விவரங்கள்தான் உயரும்!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!