நடப்பு ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மே 21ஆம் தேதி முதல் ப்ளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்கின்றன. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு இங்கிலாந்து வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் அதிரடியான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.
தற்போது 17வது ஐபிஎல் சீசனில் இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றில் பங்கு பெற மாட்டார்கள் என்றும் முதலில் கூறப்பட்டது. தற்போது பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் உண்மையான சூழ்நிலை விளக்கப்படவில்லை.
சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த பங்களாதேஷ் அணியின் முஸ்தபிஷூர் ரஹ்மான் தங்கள் நாட்டு அணிக்காக விளையாட பங்களாதேஷ் திரும்பினார். இன்னொரு பக்கத்தில் இங்கிலாந்து சேர்ந்த நிறைய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த நாட்டில் நடக்க இருக்கும் டி20 தொடரில் விளையாட திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இங்கிலாந்து டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்கள் பிளே ஆப் சுற்றில் விளையாடாமல் நாடு திரும்பினால், சம்பந்தப்பட்ட ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படுவதோடு, ஐபிஎல் முக்கிய போட்டிகளில் தரமும் மிகக் குறைவாக மாறிவிடும். இதனால் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை தர முடியாது. மேலும் ஒவ்வொரு நாடு அனுப்பும் வீரர்களுக்கும், அவர்கள் பெரும் சம்பளத்தில் பத்து சதவீதத்தை பிசிசிஐ அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை எல்லா வீரர்களுக்கும் அவர்களுடைய நாட்டுக்கு விளையாடுவதுதான் முக்கியமானது. இருப்பினும் நீங்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட ஒப்புக்கொண்டிருந்தால், உங்கள் உறுதியை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளை நீங்கள் மதிக்காமல் அணி உரிமையாளர்களை வீழ்த்துகிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பெரிய அளவு சம்பாதிக்கிறீர்கள்.
இதையும் படிங்க : தோனி பாயிடம் நான் ஐடியா கேட்டதில்லை.. அவர் எனக்கு சொன்னது இந்த சில விஷயங்கள்தான் – ருதுராஜ் பேட்டி
ஒரு வீரர் வாங்கும் சம்பளத்தில் இருந்து, அவர்கள் பாதியில் நாடு திரும்பும் பொழுது, சம்பளத்தை கழிக்க உரிமையாளர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். மேலும் ஒரு வீரரின் 10 சதவீத சம்பளத்தை அவர்கள் கிரிக்கெட் போர்டுக்கும் கொடுக்கக் கூடாது. டி20 லீக் உலகத்தில் பிசிசிஐ மட்டுமே இப்படி மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு பணம் கொடுத்து வருகிறது” என்பது குறிப்பிடத்தக்கது.