நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்பில் இருந்து தோல்வியடைந்த காரணத்தினால் நிறைய விமர்சனங்கள் மும்பை இந்தியன்ஸ் அணி மீது வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த அணியின் வீரர் பியூஸ் சாவ்லா தோல்விக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசி அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் இருவரையும் முதல் ஏழு பந்துகளில் வெளியேற்றி விட்டது. இதைத் தொடர்ந்தும் சிறப்பான முறையில் பந்து வீசவே செய்தது. மழையால் 16 ஓவர்களுக்கு 157 ரன்கள் மட்டுமே கொடுத்தது.
மேலும் பேட்டிங் செய்ய வந்து முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தது. வெற்றி பெறுவதற்கு இப்படி எல்லாமே சரியாக அமைந்த நிலையில், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் வீசிய ஏழு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 38 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த மும்பை அணியின் பியூஸ் சாவ்லா பேசும் பொழுது “நாங்கள் போட்டியை மிகவும் நன்றாக தொடங்கினோம். ஆனால் சுனில் நரைன் ஸ்பெல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஸ்பெல், ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
கேகேஆர் சுழல் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள்? அவர்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள்? என்ற வகையில் அவர்களால் போட்டியை வெல்ல முடியும். ஆனால் பிளே ஆப் சுற்றைப் பொறுத்தமட்டில் நீங்கள் குறிப்பிட்ட நாளில் எப்படி விளையாடுகிறீர்கள்? என்பது முக்கியம். ஐபிஎல் தொடரில் ஆட்டத்தை மாற்ற உங்களுக்கு நான்கு ஓவர்கள் தேவை. கொல்கத்தா அணியிடம் அந்த மொமெண்டம் இருக்கிறது. எனவே அவர்கள் வெற்றி பெறலாம்.
இதையும் படிங்க : சூர்யாவுக்கு இந்த வீக்னஸ் இருக்கு.. உலககோப்பையில் கூட இதைத்தான் குறி வச்சாங்க – அம்பதி ராயுடு விளக்கம்
சில நேரங்களில் நாங்கள் நன்றாக பந்து வீசுகிறோம் ஆனால் அதே நேரத்தில் அந்த சமயத்தில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்வதில்லை. இதேபோல் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யும்பொழுது நன்றாக பந்து வீசுவது கிடையாது. எனவே எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே பலவீனம் இல்லை. நாங்கள் சில போட்டிகளில் ஒரு அணியாகவே தோற்றோம். இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு” என்று கூறியிருக்கிறார்.