W,W,W,6.. ஆஸியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி.. ரிங்கு சிங் மாஸ் ஃபினிஷ்.. சூர்யா சூறாவளி!

0
13843
Rinku

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த மேத்யூ ஷார்ட் 23 ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்லீஷ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள்.

சிறப்பாக விளையாடிய ஸ்மித் 52(31) என ஆட்டம் இழக்க, இன்னொரு முனையில் அபாரமாக விளையாடிய ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக சதம் அடித்து 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பந்தை சந்திக்காமலே துணை கேப்டன் ருத்ராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷான் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவருமே அரை சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்கள்.

இஷான் கிஷான் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த திலக் வர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். கைமேல் வெற்றி இருந்த நேரத்தில் சூரியகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 80 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து, அடுத்த பந்தில் சிங்கிள் ரன் எடுத்தார். இதற்கு அடுத்து வெற்றிக்கு நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த நிலையில் தேவையில்லாமல் பந்தை தூக்கி அடித்து மூன்றாவது அக்சர் படேல் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த பந்தில் ரன் ஏதும் இல்லாமல் ரவி பிஷ்னோய் வெளியேறினார்.

கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் என்று ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏறியது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ரிங்கு சிங் அடித்து இரண்டு ரன்கள் எடுக்க முயற்சி செய்ய, அர்ஸ்தீப் சிங் ரன் அவுட் ஆனார். ஆனாலும் ஒரு ரன் கிடைக்க ஆட்டம் சமன் ஆனது.

இந்த நிலையில் கடைசிப் பந்தை சீன் அப்பாட் வீச ரிங்கு சிங் அபாரமாக தூக்கி நேராக சிக்சர் அடித்தார். ஆனால் அந்தப் பந்து நோபால் ஆக இருந்ததை நடுவர் பின்பு அறிவித்தார். இதன் காரணமாக சிக்ஸர் வழங்கப்படவில்லை. இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எளிமையாக வெல்ல வேண்டிய போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு கடைசியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 22 ரன்கள் எடுத்தார். தற்பொழுது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வென்று முன்னிலையில் இருக்கிறது!