இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு தகுதிபெற இனி என்ன செய்யவேண்டும்? இனியும் இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதா? – ரிப்போர்ட்!

0
9890

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? என்பதை பார்ப்போம்.

இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதால் 2-1 என்ற கணக்கில் தற்போது வரை முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணிக்கு இன்னும் அது உறுதியாகவில்லை. கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினால், அது இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி விடும். மேலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

குறிப்பாக, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 53.3% வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்கு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால், இலங்கை அணிக்கும் இன்னும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு மீதம் இருக்கின்றது.

- Advertisement -

இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணி நேரடியாக வெளியேறும். இந்திய அணிக்கு இறுதி போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி 3-1 அல்லது 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அது இந்திய அணிக்கு சிக்கலை தந்துவிடும் என்பதால் கடைசி போட்டியில் வெற்றி பெறும் முனைப்பிலேயே களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வருகிற மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸி., வெற்றி பெற்று தொடரை சமன் செய்யவும் காத்திருக்கும் என்பதால் போட்டியில் பரபரப்பு நிலவுவது நிச்சயம்.