மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதில் பரபரப்பாக நடைபெற்ற 17 வது போட்டியில் டெல்லி அணி பெங்களூர் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சபாலி வர்மா 23 ரன்களிலும், லேர்னிங் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் அதற்குப் பிறகு களம் இறங்கிய ரோட்ரியஸ் அதிரடியாக விளையாடி 58 ரன்களும், கேப்சி 42 ரன்களும் குவித்தனர்.
டெல்லி அணி பந்துவீச்சில் ஸ்ரேயான்கா பாட்டில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மந்தனா ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மொலினக்ஸ் 30 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதனால் 89 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணிக்கு, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் எல்லீஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி 32 பந்துகளில், 49 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியின் டிவைன் 16 பந்தில் 26 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, வர்க்கம் ஆறு பந்தில் 12 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிச்சா கோஸ் களத்தில் இருந்தார். முதல் பந்தில் சிக்சர் அடிக்க, இரண்டாவது பந்து டாட் பால் ஆனது. மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும், நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி இரண்டு பந்துகளில் எட்டு ரன்கள் தேவைப்பட, ஐந்தாவது பந்தினை அபாரமாக சிக்சருக்கு விளாசினார். இந்நிலையில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் டெல்லி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இருப்பினும் புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே பெங்களூரு அணிக்கும், நான்காவது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேச அணிக்கும் தலா ஒரு போட்டி உள்ளன. பெங்களுர் அணி தனது அடுத்த போட்டியில் மும்பை அணியை வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
இதற்கு இன்று நடைபெறும் ஆட்டத்தில் யூபி வாரியர்ஸ் அணி தோல்வி அடைய வேண்டும். யூபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம். ஏனெனில் நெட் ரன் ரேட் விகிதத்தில் பெங்களூரு அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த இரு அணிகளும் தோல்வி அடையும் பட்சத்தில் குஜராத் அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி, மும்பை அணிகள் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஆறு புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும், ஆறு புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கி இருக்கும் யூபி வாரியர்ஸ் அணி நான்காவது இடத்திலும்,ஒரு வெற்றியுடன் குஜராத் அணி 5வது இடத்திலும் உள்ளன.