இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான தற்காலிக அணி அறிவிப்பை அனைத்து அணிகளும் வெளியிடுவதற்கான கடைசி நாளாக நேற்றைய நாளை ஐசிசி நிர்ணயித்திருந்தது.
இப்படி அறிவிக்கப்படும் அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்து கொள்ள இந்த மாதம் 26 ஆம் தேதி வரையில் அனுமதியும் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முதலில் ஒரு அணியை அறிவிப்பதற்கு நேற்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது!
ஆஸ்திரேலியா அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றையும் வென்று அபாரமாக கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்து மிக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தங்கள் உலக கோப்பை அணியை பரிசோதித்துப் பார்க்க இந்த தொடரை மிகவும் நம்பி இருந்தது.
ஆனால் இந்த நிலையில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் என முன்னணி வீரர்கள் நான்கு பேர் காயமடைந்து தொடருக்கு வராமலேயே வெளியேறினார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தற்காலிக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இந்த நால்வருமே சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் காயம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து செப்டம்பர் 26ஆம் தேதி இறுதி அணியில் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறும்பொழுது “காயமடைந்த நான்கு வீரர்களும் மீண்டும் அணி திரும்புவதற்கான வேலைகளில் இருக்கிறார்கள். இறுதி அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக சேர்த்து மொத்தம் எட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எங்களுக்கு இருக்கின்றன. இது தொடர்ந்து உலக கோப்பைக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களும் இருக்கிறது. இது எங்களுடைய அணியை கட்டமைப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் வழங்கும்!” என்று கூறி இருக்கிறார்!
ஆஸ்திரேலியாவின் தற்காலிக உலகக் கோப்பை அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர் , ஆடம் ஜம்பா.