நான் 3வது 4வது இடம் பிடிக்க வரல; ஜெயிக்க வந்து இருக்கேன் – மும்பை இன்டியன்ஸ் பயிற்சியாளர் சவால்!

0
720
Boucher

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக் உலக அளவில் மிகவும் பிரசித்தம் பெற்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கக் கூடிய டி20 லீக்காக ஐபிஎல் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பல முன்னணி கிரிக்கெட் நாடுகளின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே!

கடந்த 15 வருடங்களாக 2008 முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பையை தலைமை இடமாகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. ஐந்து முறை கோப்பையை வென்று முதல் இடத்தில் இருப்பது மட்டும் அல்லாமல், ரசிகர்கள் பலம் மற்றும் சந்தை மதிப்பு என இந்த அணி முன்னணியில் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக இருந்தாலும் இந்த அணி முதன் முதலில் 2013 ஆம் ஆண்டுதான் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அடுத்து 2015 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிறகு இலங்கை அணியின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் மகில ஜெயவர்த்தன 2017 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை அடுத்தடுத்து வென்று அசத்தியது.

இந்த நிலையில் 2021 மற்றும் 2022 எனத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றை எட்ட முடியாமல் மும்பை அணி வெளியேறியது. இதில் கடந்த ஆண்டு 10 அணிகள் பங்கு பெற்ற தொடரில் பத்தாவது இடத்தை பிடித்து ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான செயல்பாட்டை பதிவு செய்து வெளியேறி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த மகில ஜெயவர்த்தன தனது பணியை ராஜினாமா செய்து நகர்ந்து கொண்டார். இதை அடுத்து இந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சில முக்கிய மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்த, தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரராக விளங்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மார்க் பவுச்சரை மும்பை அணி நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக நியமித்தது.

அவர் தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசும்பொழுது பல முக்கிய தகவல்களை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக சர்வதேச இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆக இருக்கின்ற காரணத்தால் அவருக்கு டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்கள் இருப்பதால், ஐபிஎல் தொடரில் சில ஓய்வுகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் பேசிய பொழுது ” நான் இந்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை பிடித்து திருப்திப்பட்டுக் கொள்ள வரவில்லை. சாம்பியன் பட்டத்தை வெல்லவே வந்திருக்கிறேன். என்னைச் சுற்றி எனக்கு வழங்கப்படும் எல்லா ஆதரவும் அதை நோக்கித்தான் இருக்கிறது. இது மிகவும் சிறந்த ஒன்று!” என்று தெரிவித்திருந்தார்!

மேலும் அவர் கேப்டன் ரோஹித் சர்மா பற்றி பேசுகையில் ” நான் முதல் முறை ரோகித் சர்மாவுக்கு எதிராக விளையாடிய பொழுது நான் விக்கெட் கீப்பராக இருந்தேன். அப்பொழுது நான் சொல்லியது ‘ இந்தச் சிறுவனுக்கு விளையாட பேட்டிங்கில் நிறைய நேரம் கிடைக்கிறது!” என்றுதான். இது இணைந்து கற்றுக் கொள்வதற்கான ஒரு இடம். நான் அவருக்கான இடத்தை அளித்து அவரது திறமை முழுவதையும் வெளியே கொண்டு வர செய்வேன்!” என்று கூறி முடித்திருக்கிறார்!