நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றி; கெத்து காட்டும் மும்பை இன்டியன்ஸ்!

0
105
WPL

2023 பெண்களுக்கான முதல் ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் இன்று மும்பை ப்ராபோன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. துவக்க வீராங்கனையாக வந்த தேவிகா வைத்யா 6 ரன்களில் வெளியேற, மற்றுமொரு துவக்க வீராங்கனையும் கேப்டனுமான அலிசா ஹீலி 46 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 58 ரன்கள் விளாசினார்!

- Advertisement -

இவருடன் நான்காவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த மற்றும் ஒரு ஆஸ்திரேலியா வீராங்கனை தாகிலா மெக்ராத் 37 பந்தில் ஏழு பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆனால் இவர்களுக்குப் பிறகு யாரும் சரியாக விளையாடாததால், நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது. சைக்கா இஷாக் நான்கு ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை வீராங்கனைகளான ஹைலி மேத்யூஸ் 12 மற்றும் யாஷிகா பாட்டியா 42 ரன்கள் என முதல் விக்கட்டுக்கு 58 ரன் பார்ட்னர்ஷிப் தந்து அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தார்கள்.

இவர்களுக்கு அடுத்த ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் மற்றும் சிவிர் பிரண்ட் மேற்கொண்டு விக்கட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதோடு அதிரடியாக விளையாடி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் 33 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 53 ரன்கள் குவித்தார். சிவிர் பிரண்ட் 31 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 45 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மும்பை அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கையும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. உத்தரப் பிரதேச அணி நான்கு போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று இரண்டில் தோற்று மூன்றாவது இடத்தை வகிக்கிறது. டெல்லி அணி நான்கில் மூன்று போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தையும், குஜராத் அணி நான்கில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று நான்காவது இடத்தையும், நான்கு போட்டியில் நான்கையும் தோற்று பெங்களூரு அணி கடைசி இடத்தையும் பிடித்திருக்கிறது!