மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது வெற்றி!

0
997
WT20WC

தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்று இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் கேப் டவுன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் கைலி மேத்யூஸ் இரண்டு ரண்களில் ஏமாற்றினாலும், முன்னாள் கேப்டன் டெய்லர் 40 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணிக்கு ஓரளவுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இவருடன் இணைந்து விளையாடிய கேம்பல் 36 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஓரளவுக்கு நல்ல தொடக்கமே கிடைத்தது. ஆனாலும் இந்திய வீராங்கனைகளில் அபாரமான பந்துவீச்சால் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளால் அதிரடியாக ரன்களை குவிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு நட்சத்திர துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 10 ரன்களில் வெளியேறினார். இன்னொரு துவக்க வீராங்கனை செபாலி வர்மா 28 ரன்கள் எடுத்தார்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த இந்திய கேப்டன் கவுர் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிச்சா கோஸ் இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை மிகவும் எளிமையாக்கினார்கள். இந்திய கேப்டன் 33 ரன்கள் ஆட்டம் இழக்க, ரிச்சா கோஸ் 40 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு வீராங்கனை தீப்தி சர்மா நான்கு ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய பெண்கள் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை ஆனார்!