பெண்கள் ஐபிஎல் ; முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி மும்பை அணி அசத்தல்!

0
211
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்த ஆரம்பித்திருக்கிறது. பெண்கள் ஐபிஎல் தொடரில் இன்று 12 வது ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின!

தொடரில் ஆரம்பத்தில் இருந்து ஏழெட்டு ஆட்டங்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் கிடைத்திருக்க அதற்குப் பிறகு, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது!

- Advertisement -

மும்பை அணிக்கு வெற்றிகரமான துவக்க வீராங்கனையாக இந்த தொடரில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டிஸை சேர்ந்த ஹைலி மேத்யூஸ் மூன்று பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்க வீராங்கனையான இந்தியாவின் விக்கெட் கீப்பர் யாஷிகா பாட்டியா 37 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 44 ரன்கள் சேர்த்தார்.

இதற்கடுத்து மூன்றாவது வீராங்கனையாக வந்த நாட் சிவர் பிரண்ட் 31 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வெற்றிக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய பெரிய பொறுப்பை கையில் எடுத்த மும்பை அணியின் கேப்டனான ஹர்மன் ப்ரீத்கவுர் அதிரடியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியாவின் கார்டனர் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்!

இதற்கடுத்து கொஞ்சம் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி மும்பை அணியின் மிகச் சிறப்பான பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து, முதல் பெண்கள் ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. மும்பை அணி தரப்பில் நாட் சிவிர் மற்றும் ஹைலி மேத்யூஸ் இருவரும் தலா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்!

- Advertisement -

லீக் சுற்றில் ஒரு அணிக்கு எட்டு ஆட்டங்கள் கிடைக்கும் என்ற நிலையில் மும்பை அணி தனது முதல் ஐந்து ஆட்டங்களை வென்று பிளே ஆப் சுற்றை உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி அணி நான்கு வெற்றிகள் உடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இரண்டு வெற்றிகளுடன் உத்தர பிரதேச அணியும், நான்காவது இடத்தில் ஒரு வெற்றியுடன் குஜராத் அணியும், ஐந்தாவது இடத்தில் ஐந்து போட்டிகளையும் தோற்று பெங்களூர் அணியும் இருக்கிறது!