பெண்கள் ஐபிஎல் ஆரம்பம்; ஹர்மன் அதிரடி ஆட்டம் ; மும்பை அபார ரன் குவிப்பு!

0
1674
WIPL

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் கிரிக்கெட் வீரர்களை வைத்து உள்நாட்டில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி வருவதை அடுத்து, பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை வைத்து ஐபிஎல் தொடரை விரிவுபடுத்தி உள்ளது!

பெண்கள் ஐபிஎல் தொடருக்காக மும்பை டெல்லி உத்தரப்பிரதேசம் குஜராத் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களை மையமாக வைத்து ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இதனை எடுத்து சில வாரங்களுக்கு முன்பு இந்த ஐந்து அணிகளுக்குமான வீராங்கனைகள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்ச வேலைக்கு இந்திய அணியின் மந்தனா விலை போனார். இந்த தொடர் மொத்தமாக மும்பையில் வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

பெண்கள் ஐபிஎல் முதல் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை டிஒய்.பாட்டில் மைதானத்தில் குஜராத் ஜெயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாசில் வென்ற குஜராத் கேப்டன் பெத் மூனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கட்டில் அதிக உலகக் கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையைக் கொண்ட ஆஸ்திரேலியா கேப்டன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன் பிரீத் கவுர் தலைமை தாங்கும் மும்பை அணி பேட்டிங் செய்ய களம் கண்டது. துவக்க வீராங்கனை ஆக களம் இறங்கிய இந்திய வீராங்கனை யாசிகா பாட்டியா ஒரு ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த மற்றும் ஒரு துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக விளையாடி 31 பந்தில் மூன்று பவுண்டரி நான்கு சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நாட் சிவியர் ஐந்து பௌண்டரிகளுடன் 23 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் மற்றும் நியூசிலாந்தின் அமலியா கெர் இருவரும் சேர்ந்து அதிரடியில் மிரட்டத் தொடங்கினார்கள். ஹர்மன் 22 பந்தில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய அமலியா கெர் 24 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 45 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் மும்பை அணி ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது!

ஆண்களுக்கான முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் களம் கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய மெக்கலம் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 158 ரன்கள் விளாசி இருந்தார். அந்த ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக பெண்கள் ஐபிஎல் தொடரில் முதல் போட்டி அமைந்திருக்கிறது!