பெண்கள் ஐபிஎல்.. கடைசி பந்தில் சிக்ஸர்.. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லியை வீழ்த்தியது

0
510
WPL

ஐபிஎல் தொடர் போன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் பெண்களுக்கு நடத்தப்படும் டபிள்யூபிஎல் டி20 லீக்கின் இரண்டாவது சீசன் இன்று பெங்களூரு மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக பேட்டிங்கை ஆரம்பித்தது.

- Advertisement -

இந்திய அணியில் லேடி ஷேவாக் என அழைக்கப்படும் செபாலி வர்மா ஒரு ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா சாதனை கேப்டன் மெக் லானிங் 25 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து அலைஸ் கேப்சி அதிரடியாக விளையாடி 53 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்கியூஸ் 24 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்தார்.

டெல்லி கேப்பிட்டல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. நாட் சிவியர் பிரண்ட், மற்றும் அமலியா கெர் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் ரன் இல்லாமல் வெளியேறினார். இன்னொரு துவக்க இடத்தில் விளையாடிய இந்திய வீராங்கனை யாஷிகா பாட்டியா 45 பந்தில் எட்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து மூன்று ரன்கள் எடுத்தது. நான்காவது பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு பவுண்டரி எடுத்து ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 34 பந்தில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 55 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து கடைசிப் பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உள்ளே வந்த சஜீவன் சஜானா அலைஸ் கேப்சி வீசிய பந்தை நேராகத் தூக்கி சிக்ஸருக்கு அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை திரில் வெற்றிபெற வைத்தார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் இலக்கை எட்டி, நான்கு வித்தியாசத்தில் முதல் போட்டியை பரபரப்பான முறையில் வென்று இருக்கிறது. மேலும் நடப்பு சாம்பியன் மும்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.