பெண்கள் ஐபிஎல்.. அப்பா டாக்ஸி டிரைவர்.. தமிழக வீராங்கனை.. மும்பை அணியில் இடம்.. யார் இந்த கீர்த்தனா?

0
355
WPL

கடந்த 16 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் உலக கிரிக்கெட்டில் எப்படியான ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விஷயம்.

ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியாவிலிருந்து நிறைய இளம் வீரர்களை கண்டெடுக்க முடிந்தது. ஒருபடி மேலே சென்று தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரரான டிவால்ட் பிரிவியஸ் போன்றவர்களுக்கும் தங்களை நிரூபிக்க ஐபிஎல் ஒரு வாய்ப்பு கொடுத்தது.

- Advertisement -

ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் ஏற்படுத்தித் தந்த மேடையை விட, பெண்கள் ஐபிஎல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு தற்பொழுது ஏற்படுத்தி தந்திருக்கும் மேடை மிகப்பெரியது. பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்கள் ஐபிஎல் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அது இன்னும் மிகப்பெரிய அளவில் மாறும்

இந்தியாவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பெண்கள் ஐபிஎல் தொடரின் மூலமாக பல நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடும் வாய்ப்புகளை பெற்றார்கள். மேலும் நிறைந்த அரங்குகளில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடினார்கள். அத்தோடு எல்லோருக்கும் நல்ல வருமானம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவிலிருந்து மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பெண் வீராங்கனைகள் உருவாவது ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது பெண்கள் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணிக்கு விளையாடாத வீராங்கனைகள் கூட இரண்டு கோடி ரூபாய்க்கு விலைக்குப் போய் ஆச்சரியப்படுத்தினார்கள். இதன் மூலம் புதிய வீராங்கனைகளின் வருகை அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இதில் ஒரு பகுதியாக நேற்று அடிப்படை விலையான பத்து லட்ச ரூபாய்க்கு தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான லெக் ஸ்பின் ஆல் ரவுண்டர் கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவர் இதுவரை தமிழக அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடுகிறார். பேட்டிங்கில் லோயர் மிடில் ஆர்டரில் வரக்கூடியவர்.

இவரது தந்தை சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனராக இருந்து வருகிறார். தமிழகம் மற்றும் இந்திய வீரரான அபினவ் முகுந்த் அவரின் தந்தையான டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியில் கீர்த்தனா பாலகிருஷ்ணன் உருவாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பணம் வாங்காமல் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தோடு இல்லாமல் அவர்களுக்கு தேவையான கிரிக்கெட் உபகரணங்களும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான அகாடமியில் இருந்து உருவாகி வந்திருக்கிறார் கீர்த்தனா பாலகிருஷ்ணன். இது குறித்து தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!