உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டு ரன்களிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுசேன் இருவரும் நிலைத்து நின்று ஆடி ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்டனர் .
பொதுவாகவே டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்து ஆடிவந்த இந்தியா இந்த முறை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது . ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோசன நிலை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார் . இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சேகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரும் விமர்சனம் எழுந்திருக்கிறது .
ஆஸ்திரேலியா அணி நான்காவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை நிர்ணயித்தால் இந்திய அணியால் எப்படி சேஸ் செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்து விவாதம் செய்து வருகின்றனர். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய விமர்சகர்கள் டாஸ் முடிவு பற்றி தங்களது விமர்சனத்தை துவங்கிவிட்டனர் .
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் . அதில் குறிப்பிட்டு இருக்கும் அவர் ” டாஸ் வென்று பவுலிங் வீசுவது வெற்றி பெற்றது போன்ற மகிழ்ச்சியான விஷயம் இல்லை . நான்காவது இன்னிங்ஸில் இலக்கை துரத்துவது என்பது எப்போதுமே சவாலான ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் இதுபற்றி தொடர்ந்து பதிவு செய்திருக்கும் அவர்” ஆஸ்திரேலிய அணியை குறைந்த ரண்களில் ஆல் அவுட் செய்தால் மட்டும் போதாது . இந்திய அணியும் முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும்” அப்போதுதான் வெற்றி பெற முடியும் என தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இருக்கிறது . மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . அதன் காரணமாக அஸ்வினை அணியில் சேர்க்க முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார் .
No OTT happiness on winning the toss and bowling…chasing in the 4th innings is always tricky. Important to not just restrict Australia in the first innings…but also, score big in the first innings with the bat too. #WTCFinal #AusvInd
— Aakash Chopra (@cricketaakash) June 7, 2023