வில்லியம்சன் ரிட்டன்.. நியூசிலாந்து உலக கோப்பை அணி.. நட்சத்திர வீரர் நீக்கம்.. இந்திய வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு.!

0
988

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த 13 வது உலகக் கோப்பை போட்டிகளுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் உலக கோப்பையில் விளையாடும் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன

இந்தியா,ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து போன்ற அணிகள் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பதினைந்து பேர் கொண்ட தங்கள் வீரர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி உலக கோப்பையில் விளையாடும் தங்களது வீரர்கள் பட்டியலை இன்று காலை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

15 பேர் கொண்ட உலகக்கோப்பை நியூசிலாந்து அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என கலந்த கலவையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து வந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது நியூசிலாந்து அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் போது கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை செய்து காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் நியூசிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் . மேலும் அவருக்கு உடற் தகுதியை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார் கேன் வில்லியம்சன்.

கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்ற தவறியது. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியிடமும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடமும் தோல்வியடைந்து உலகச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற தவறியது நியூசிலாந்து அணி. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என கலந்த கலவையாக நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த அதிரடி வீரர் ஆலன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மிலின் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக நியூசிலாந்து அணியில் விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்தரா முதல்முறையாக உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதோடு அணியையும் உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக வழிநடத்த இருக்கிறார். மேலும் இந்த அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் , ஜேம்ஸ் நிஷாம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் ரச்சின் ரவீந்தரா. மார்க் சாப்மேன், வில் யங் போன்ற புது முக வீரர்களும் இந்த அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். அந்த அணியின் டாம் லேதம் விக்கெட் கீப்பர் மற்றும் உலகக்கோப்பை போட்டியின் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பந்துவீச்சில் லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி போன்ற அனுபவம் மிக்க வேக பந்துவீச்சாளர்களும் இஷ் சோதி மற்றும் ஆல்ரவுண்டர் மிச்சல் சாந்த்னர் ஆகியோரும் இடம் பெற்று இருக்கின்றனர். மேலும் உலகக் கோப்பைக்கு முன்பாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பது நியூசிலாந்து அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து இருப்பதோடு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல்:

கேன் வில்லியம்சன் (கேப்டன் )
டிரெண்ட் போல்ட்
மார்க் சாப்மேன்*
டெவோன் கான்வே*
லாக்கி பெர்குசன்
மாட் ஹென்றி
டாம் லாதம் (விக்கெட் கீப்பர்)
டேரில் மிட்செல்*
ஜிம்மி நீஷம்
க்ளென் பிலிப்ஸ்*
ரச்சின் ரவீந்திரன்*
மிட்செல் சான்ட்னர்
இஷ் சோதி
டிம் சவுத்தி
வில் யங்*