வேணும்னா பாருங்க.. ODI உலக கோப்பையில் இந்த வீரர்தான் அதிக ரன்கள் எடுப்பார்.. வீரேந்திர சேவாக் உறுதியான கணிப்பு!

0
2376
Sehwag

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது. மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களுக்கு உலகக்கோப்பை தொடர்கள் இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் வரவேற்பு உண்டு. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பல நினைவுகளை வைத்திருக்கக் கூடியது!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் சந்திக்கிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் சந்தித்து அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது!

- Advertisement -

இறுதியாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதற்கடுத்து 12 ஆண்டுகளாக எந்த வடிவத்திலும் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் லெஜெண்ட் வீரருமான வீரேந்திர சேவாக், நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை வெளியிட்டு பேசியிருக்கிறார்.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “அதிக ரன் அடிப்பவர்களுக்கான போட்டியில் நிறைய துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் ஏனென்றால் இந்தியாவில் நல்ல விக்கெட் இருக்கிறது. இதனால் துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். நான் இதில் ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும். ரோகித் சர்மாவை தேர்வு செய்கிறேன். என்னிடம் இதற்கு இரண்டு பெயர்கள் இருந்தன. ஆனால் நான் இந்தியன் என்பது எனக்கு தெரியும். எனவே ரோகித் சர்மா என்னுடைய தேர்வு.

- Advertisement -

ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏனென்றால் உலகக் கோப்பைகள் வரும் பொழுது அவரது ஆற்றல்மட்டம் மற்றும் செயல்திறன் மிகவும் அதிகரிக்கும். அதனால் நான் அவரை நம்புகிறேன். இந்த முறை அவர் கேப்டனும் கூட. எனவே அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். நிறைய ரன்கள் எடுப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஐந்து சதங்கள் உடன் 648 ரன்களை 81 ஆவரேஜில் குவித்திருந்தார். இந்த ஆண்டு எல்லாவிதமான கிரிக்கெட் வடிவத்திலும் சேர்த்து 16 போட்டிகளில் விளையாடி 927 ரன்களை 48.57 ஆவரேஜில் எடுத்திருக்கிறார். எனவே நிச்சயமாக அவர் மீதான எதிர்பார்ப்பு உலகக்கோப்பையில் இருக்கிறது!