சிஎஸ்கே போட்டிக்கு முன்.. ஆர்சிபியை விட்டு கிளம்பிய 2 நட்சத்திர வீரர்கள்.. பெரும் பின்னடைவு

0
961

மிகவும் சுமாராக இந்த சீசனை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளை வெற்றி பெற்று ஐபிஎல் 2024 ப்ளே ஆப் சுற்று ரேசில் நீடிக்கிறது. இதுவரை 13 போட்டிகளை விளையாடியுள்ள பெங்களூர் அணி தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி தனது கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இரண்டு முக்கிய வீரர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது பெங்களூர் அணிக்கு ஒரு பெரிய இழப்பு என்பது சந்தேகமே இல்லை.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை தழுவி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பின்னர் இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஆர்சிபி அணி செய்தது. குறிப்பாக பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் களமிறக்கப்பட்டார். மேலும் பந்துவீச்சிலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றங்களை செய்த பின்னர் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் வர ஆரம்பித்தது.

- Advertisement -

பேட்டிங்கில் வில் ஜாக்சின் வருகைக்குப் பின்னர் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவானது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் தோல்விகளில் துவண்டு போயிருந்த பெங்களூர் அணி வீரர்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியாக அமைந்தது. அந்த போட்டியில் அபாரமாக விளையாடி 10 சிக்ஸர்களை விளாசி 41 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட, நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆர்சிபி வீரர்கள் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லீ ஆகியோர் ஞாயிறு இரவு தாயகம் திரும்பினர். இந்த வீரர்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் வாழ்த்து சொல்லும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜாக்ஸ் மற்றும் டாப்லீ தங்களது சர்வதேச கடமைகளுக்காக தாயகம் திரும்புகிறார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஐபிஎல் தொடரிலும், மைதானத்திலும் நம்ப முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள். விரைவில் சந்திப்போம் நண்பர்களே” என்று பதிவிட்டு இருந்தது.

மேலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் மற்றும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் தாயகம் திரும்பி இருக்கின்றனர். குறிப்பாக பெங்களூர் அணிக்கு வில் ஜாக்ஸ் இழப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -