“கில் விளையாடுவாரா?.. உங்கள் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.. இதுவே நடக்கப் போகிறது!” – தேர்வுக்குழு முன்னாள் தலைவர் தகவல்!

0
1384
Gill

நாளை இந்தியாவில் சாலைப் போக்குவரத்து நெருக்கடி குறைவாக இருக்கும் அளவிற்கான கிரிக்கெட் போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற இருக்கிறது!

நாளைய இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் இதற்காக காத்திருக்கிறார்கள். இதற்கான எதிர்பார்ப்புகளை கூட்டும் விதத்தில் மீடியாக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர், இந்த ஆண்டில் டன் கணக்கில் ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி சென்ற இந்திய அணி உடன் இணையாமல், சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று, தற்பொழுது குஜராத் அகமதாபாத் சென்று நேற்று ஒரு மணி நேரம் பயிற்சியும் செய்து நம்பிக்கை தந்து இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் நாளை மிக முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு துவக்க வீரராக களம் இறங்குவாரா என்பது குறித்து ஏகத்துக்கும் எதிர்பார்ப்பும், யூகங்களும் நிரம்பிக் கிடக்கிறது. அதே வேளையில் இதைச் சுற்றி நிறைய வதந்திகளும் பரவிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறும்பொழுது “எல்லாவிதமான யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறேன். கில் கண்டிப்பாக நாளை நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்.

அவரைப் போன்ற ஒரு வீரரை தவறவிடுவது துரதிஷ்டவசமானது. அவருக்கு காய்ச்சல் இருந்தது ஆனால் அது கவலைப்படும் அளவுக்கு இல்லை. இதன் காரணமாகத்தான் அவர் டெல்லி செல்லாமல் சென்னையில் இருந்து சிகிச்சை பெற்று அகமதாபாத் சென்றிருக்கிறார். அவர் குறித்து வந்த செய்திகள் எல்லாமே வதந்தி.

நாங்கள் கேள்விப்பட்டது என்னவென்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரை இரண்டாவது போட்டியில் விளையாட வைக்கவில்லை என்பதுதான். அவர் சென்னையில் ஒருநாள் தங்கினார். தற்பொழுது அவர் அகமதாபாத்துக்கு சென்று விட்டார். எனவே அவர் நாளை நிச்சயம் விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்!