இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.
இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் மூன்றாவது ஐபிஎல் தொடர் ஆகும். ஐபிஎல் தொடரில் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடப்பது வழக்கம். நடுவில் கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தினால் மூன்று ஆண்டில் நடக்க முடியாமல் போனது.
பொதுவாக ஐபிஎல் தொடரில் சுவாரசியம் என்பது ஏலத்தில் இருந்துதான் உருவாகிறது. ஒரு அணியின் வெற்றி தோல்வி ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலமாக 50% நிர்ணயிக்கப்படுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவார்கள்.
மேலும் ஒரு அணியில் ஐந்து வீரர்கள் தக்கவைக்கப்பட, மற்ற இடங்களுக்கு புதிய கலவையில் புதிய வீரர்கள் வந்து சேரும் பொழுது, புது மாதிரியான அணி ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு பார்ப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கிறது. இதனால் ஐபிஎல் தொடர் எப்பொழுதும் இளமையாகவே இருக்கிறது. ஒரே வீரர்களுடன் ஒரே அணியாக தொடரும் பொழுது, ரசிகர்களுக்கு அது ஒரு வித சலிப்பை கொடுக்கலாம். ஐபிஎல் இன் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் தோமல் அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடக்குமா? எத்தனை வீரர்களை ஒரு அணி தக்க வைக்கலாம்? என்பது குறித்தான முக்கிய எதிர்பார்ப்பு மிக்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் மெகா ஏலத்தை நடத்துவோம். ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம். இதன் மூலமாக புதிய அணிகள் உருவாக்கப்படும். இது மேலும் சுவாரசியமாக ஐபிஎல் தொடரை மாற்றும்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஐபிஎல் தொடர் மூலமாக புதிய திறமைகளை நாங்கள் கொண்டு வந்ததை போலவே, உதாரணமாக ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து கிரிக்கெட் திறமைகளை கொண்டு வந்ததை போலவே, எப்பொழுதும் கொண்டு வருவோம். இதனால் எல்லாகிரிக்கெட் நாடுகளும் பலனடைந்து இருக்கின்றன.
இதையும் படிங்க : “சந்தேகமே கிடையாது.. பும்ரா எல்லோருக்கும் மேலே இருக்கிறார்.. காரணம் இதான்” – கிளன் மெக்ராத் பாராட்டு
இந்த முறை சவால் என்னவென்றால், ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே நாங்கள் ஐபிஎல் தொடரை மே 25 அல்லது 26 ஆம் தேதிக்குள் முடித்தாக வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணி அமெரிக்கா போன்ற ஒரு புதிய சூழ்நிலையில் சென்று தங்கி பழகி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.