இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், முன்னாள் கேப்டன் கிரைக் பிராத்வெய்ட்டை அதிரடியாக நீக்கியுள்ளது. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பேட்டிங் குழுவை வலுப்படுத்த, அலிக் அதானசே மற்றும் டேகனரைன் சந்தர்பால் ஆகியோரை மீண்டும் அணிக்குள் அழைத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பிராத்வெய்ட் தனது இடத்தை இழந்தார். அவருடன் கீசி கார்ட்டி, ஜோஹான் லேய்ன், மற்றும் மைகைல் லூயிஸ் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. இன்னும் டெஸ்ட் அறிமுகமாகாத இடது கை சுழற்பந்து வீச்சாளர் காரி பியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தோல்வியால் எடுத்த முடிவு:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் டேரன் சம்மி, “டேகனரைன் சந்தர்பாலின் கம்பேக், சமீபத்திய தோல்விகளை ஏற்படுத்திய பேட்டிங் வரிசையை மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு. அலிக் அதானசே சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறனுக்காகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் காரி முதல் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக இடம்பெறுகிறார்,” என தெரிவித்தார்.அதானசே கடைசியாக ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2024 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கடைசி டெஸ்ட் ஆடிய சந்தர்பால், ஜான் கேம்ப்பெல்லுடன் தொடக்க வீரர்களாக இணையவுள்ளார்.
அணி தேர்வு:
42.05 முதல் தர சராசரி கொண்ட கெவ்லன் ஆண்டர்சன் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.பேட்டிங் குழுவில் கேப்டன் ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷை ஹோப், டெவின் இம்லாக், மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் இடம்பெறுகின்றனர். சுழற்பந்து வீச்சை வாரிக்கன், பியர், மற்றும் சேஸ் வழிநடத்துவர். வேகப்பந்து வீச்சில் அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஆண்டர்சன் பிலிப், மற்றும் ஜெய்டன் சீல்ஸ் இடம்பெறுகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி செப்டம்பர் 22ஆம் தேதி கரீபியனை விட்டு புறப்பட்டு, செப்டம்பர் 24-ஆம் தேதி அகமதாபாத்தில் வந்திறங்கவுள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்குகிறது. 2018-19 இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற சேஸ், ஹோப், அல்சாரி, மற்றும் வாரிக்கன் மட்டுமே இந்த அணியில் உள்ளனர்.
நெருக்கடியான அட்டவணையை முன்னிட்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் நேபாளத்துக்கு எதிராக மூன்று T20I போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் விளையாடவுள்ளது. பின்னர் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், அக்டோபர்-நவம்பரில் வங்கதேசத்தில் வெள்ளைப் பந்து தொடர், மற்றும் நவம்பர் 5 முதல் டிசம்பர் 22 வரை நியூசிலாந்தில் ஐந்து T20I, மூன்று ODI, மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் உள்ளடங்கிய சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஐசிசி டி20 தரவரிசை.. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து அசத்தல்.. மூன்று பிரிவிலும் இந்தியர்கள் ஆதிக்கம்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி (இந்திய டெஸ்ட் தொடருக்காக):
அலிக் அதானசே, டேகனரைன் சந்தர்பால், காரி பியர், ஜோமல் வாரிக்கன், ஜான் கேம்ப்பெல், கெவ்லன் ஆண்டர்சன், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷை ஹோப், டெவின் இம்லாக், பிராண்டன் கிங், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்.






