இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் டெஸ்ட் டீமில் எதற்காக எடுக்கப்பட்டார்கள்? – வெளியான காரணம்!

0
1093

சூரியகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவரும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன், ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 9ம் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்குகிறது.

இதில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை புதிதாக நியமிக்கப்பட்ட சேத்தன் சேர்மன் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

ரிஷப் பண்ட் காலவரையின்றி அணியிலிருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் எதற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்கிற காரணத்தை பிசிசிஐ அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“விக்கெட் கீப்பராக இருந்து வரும் கேஎஸ் பரத் முதல் ஆறு இடங்களுக்குள் பேட்டிங் செய்வாரா? என்பது சந்தேகம்தான். அவர் பேக்கப் பிளேயராக இருக்கிறார். ஒருவேளை அவர் விளையாடினால் ஒரு பவுலர் குறைவாக விளையாட வேண்டும். அதே நேரம் இஷான் கிஷன் விளையாடினால் அவர் டாப் 6 இடங்களுக்குள் விளையாடுவார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார்.

விக்கெட் கீப்பர் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக தற்போது இல்லை. ஆனால் நம்பர் 5 இடத்தில் களமிறங்கி ரிஷப் பண்ட் போல தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர் அணிக்கு தேவைப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த தொடரில் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணி அதிகமாக விளையாட உள்ளது. சூரியகுமார் யாதவ் ஸ்பின் சிறப்பாக எதிர்கொள்வார் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.” என பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.