ரசல் மற்றும் நரைனை ஏன் தேர்வு செய்யவில்லை? – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் விளக்கம்!

0
191
Haynes

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ ரசல் மற்றும் சுனில் நரைன் போன்ற பெரிய வீரர்கள் இருந்தும் படுதோல்வியைச் சந்தித்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களின் சம்பள பிரச்சனை, வாரியத்தில் உள்ள முன்னாள் வீரர்களோடு இந்நாள் வீரர்களின் முரண்பாடுகள் என்று எப்பொழுதும் ஒரு குழப்பம் மிகுந்த சூழலே அங்கு நிலவும். மேலும் வருமானத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் விளையாடத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து அவர்களின் கிரிக்கெட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறது.

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி :

கேப்டன் நிக்கோலஸ் பூரன், துணைக் கேப்டன் ரோமன் பவல், சிம்ரன் ஹெட்மையர், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், ரேமன் ரேபியர், ஓடியன் ஸ்மித், யானிக் கரியாஹ், செல்டன் காட்ரோல், அகேல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப் மற்றும் ஒபிட் மெக்காய்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ ரசல் மற்றும் சுனில் நரைன் தேர்வாகவில்லை. மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வெஸ்ட்இண்டீஸ் உலகக்கோப்பை அணியில் இல்லை. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் வாரிய இயக்குனர் மற்றும் முன்னாள் வீரர் ஹேயின்ஸ் காரணங்களை விளக்கி உள்ளார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” நாங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ரூ ரசலை சந்தித்துப் பேசினோம். அவரின் பேட்டிங் ஃபார்ம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் போட்டிகளில் நாங்கள் விரும்புவது போல் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் ரசல் இடம் இருந்து விலகி, நல்ல பார்மில் இருக்கும் ஒரு வீரரிடம் போக விரும்புகிறோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

அணியில் சுனில் நரைன் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ள அவர் ” அவரிடம் இருந்து அவர் விளையாடுவது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. அவருடன் அணியின் கேப்டன்தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். சுனில் நரைன் தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அணியில் எவின் லூயிஸ் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து “நாங்கள் அவருடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினோம். அவர் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறார். அவர் இதுபற்றி எங்களிடம் தெரிவித்தார். இதனால் மேலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.