“விராட் கோலிக்கு டி20ல் இடம் கொடுக்கவேண்டும். ஆனால் ரோகித் சர்மா…” – இருவரும் டி20ல் விளையாட வேண்டுமா? என்பதற்கு கங்குலி கருத்து!

0
621

ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் சவுரவ் கங்குலி. மேலும் அஜித் அகர்கர் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கும் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஜூலை மாதம் துவக்கத்தில் புதிய தேர்வுக்குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டார். இவர் சீனியர் வீரர்களுக்கு மதிப்பளித்து டி20 போட்டிகளிலும் வாய்ப்புகள் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சில சீனியர் வீரர்களை டி20 போட்டிகளுக்கு எடுக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் எடுக்கப்படாததற்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார்

“விராட் கோலிக்கு ஐபிஎல் சீசன் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாட வேண்டும். வயது என்பதை தாண்டி இப்போதும் குவாலிட்டி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இன்றளவும் டி20 போட்டிகளில் விளையாட தகுதியுடையவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை. அதை தவறாகவே பார்க்கிறேன்.” என்றார் கங்குலி.

- Advertisement -

“புதிய தேர்வுக்குழு தலைவராக வந்திருக்கும் அஜித் அகர்கர் நன்றாக தன்னுடைய பணியை செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உலகக்கோப்பைக்கு இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன. அஜித் அகர்கர் மீது மிகப்பெரிய பணி வந்திருக்கிறது. அதையும் செவ்வனே கையாண்டு செயல்படுவார் என்று நம்புகிறேன்.” என்றும் கங்குலி பேசினார்.