பங்களாதேஷ் அணி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சொந்த நாட்டில் விளையாடுகிறது. இன்று நடந்த தொடரின் கடைசி போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளையும் பங்களாதேஷ் அணி வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் நஜீபுல் சாந்தோ 28 பந்தில் 36 ரன்கள் மேல் வரிசையில் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி இருந்தார்கள். இதற்கு அடுத்து நெருக்கடியான நிலையில் தாக்குப்பிடித்து விளையாடிய அனுபவ வீரர் மகமதுல்லா 44 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்.
கடைசிக் கட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு ஷாகிப் அல் ஹசன் 17 பந்தில் 21 ரன்கள், ஜாகீர் அலி 11 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சு தரப்பில் பிரையன் பென்னெட் மற்றும் முசார்பானி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். மூன்றாவது இடத்தில் வந்த அதிரடி வீரர் சிக்கந்தர் ராஸா 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன், 46 பந்தில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தை கட் பண்ணுங்க.. கிரிக்கெட் போர்டுக்கும் பணம் தராதிங்க – கவாஸ்கர் பேச்சு
முடிவில் 18.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூத்த அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் வராத பொழுது தொடர்ந்து வெற்றி பெற்ற பங்களாதேஷ், அவர் கடைசியில் இடம் பெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றை தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.