“அஸ்வினுக்கு ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறது?’: ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை காரசாரமாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

0
419

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது. நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவஜாவின் அருமையான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 158 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பீட்டர் ஹான்ஸ்கம் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் மிகச் சிறப்பாக ஆடியது. பீட்டர் ஹான்ஸ்கம் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளில் பௌண்டரிகளை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவியினர். ட்ரிங்க்ஸ் பிரேக்க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வின் சிறப்பாக பந்துவீசி பீட்டர் ஹான்ஸ்கம் விக்கெட்டை வீழ்த்தினார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த கேமரூன் கிரீன் விக்கெட்டை உமேஷ் யாதவ் தொடர்ந்து வீழ்த்த ஆஸ்திரேலியா அணி சரிவை சந்தித்தது. அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி பின் வரிசை ஆட்டக்காரர்களை எளிதாக வீழ்த்தினர். இதன் காரணமாக 186 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்ட யுக்திகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் போட்டியின் நேரலையின் போது பேசிய அவர்” ஒருவேளை மேட்ச்-அப்களில் அதிக கவனம் செலுத்துவது தான் ரோகிதத்தின் தந்திரமா? என கேள்வி எழுப்பினார். இரண்டு வலது கை ஆட்டக்காரர்கள் இருக்கும்போது முதலில் சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பந்து வீச்சிக்கு பயன்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா அதன்பிறகு சிராஜுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அக்சர் பட்டேலை பந்து வீச அழைத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி எளிதாக ரன் குவிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது”எனக் கூறினார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ஆட்டம் ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை பந்து வீச பயன்படுத்தாதது மிகப்பெரிய தவறு என சுட்டிக்காட்டினார். ட்ரிங்ஸ் பிரேக்க்கு பிறகு பந்து வீச வந்த அஸ்வின் உடனடியாக பீட்டர் ஹான்ஸ்கம் விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வினும் உமேஷ் யாதவும் இணைந்து 11 ரன்களில் 6 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை 197 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கினர். இதனை சுட்டிக்காட்டி பேசிய கவாஸ்கர் மேட்ச் அப்களில் அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஒரு கிரிக்கெட் வீரரின் தரத்தை நம்ப வேண்டும் என கூறினார். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின் இந்தத் தொடரிலும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரை இரண்டாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே பயன்படுத்தாதது ஆஸ்திரேலியா அணி அதிக ரன்கள் எடுப்பதற்கு காரணமாக அமைந்ததாக கூறினார் .

- Advertisement -

இந்தத் தொடரிலும் அஸ்வின் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தாலும் அஸ்வினுக்கு மட்டும் இப்படி ஏன் அடிக்கடி நடக்கிறது ?என கேள்வி எழுப்பி இருக்கிறார் கவாஸ்கர். அஸ்வின் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்ஸ்மேன் இடது கை பேட்ஸ்மன் என எந்த பேட்ஸ்மன்களாக இருந்தாலும் அவர்களை அவுட் செய்யும் திறமை இருக்கிறது. அதனால் போட்டியில் அதிகப்படியான தந்திரங்களை நம்புவதை விட்டுவிட்டு வீரர்களின் தரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என அணி நிர்வாகத்தை சாடி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.