ஆசியகோப்பை செல்லும் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் ஏன் இல்லை? – பிசிசிஐ கொடுத்த விளக்கம்!

0
216

ஆசிய கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் ஏன் இடம்பெறவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்திருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்திய அணி இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணியில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் அனுபவ வீரர் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் இடம் பெறவில்லை. இவர்கள் இருவரும் ஏன் இடம்பெறவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பிசிசிஐ தரப்பு பதில் அளித்திருக்கிறது.

“பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தங்களது காயங்களில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் தொடர்ந்து சிகிச்சை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே ஆசிய கோப்பை தொடரில் இருவரையும் எடுக்கவில்லை.” என பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்ஷல் பட்டேல் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று தற்போது வரை தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். டி20 உலகக்கோப்பை உட்பட 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி 20.95 சராசரி கொண்டிருக்கிறார். டெத் அவர்களின் இந்திய அணிக்கு தொடர்ந்து இன்றியமையாத பங்களிப்பை கொடுத்து வரும் இவர் தற்போது காயத்தில் இருப்பது இந்திய அணிக்கு ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவை தரலாம்.

- Advertisement -

ஹர்ஷல் பட்டேலுக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் குணமாவதற்கு சற்று தாமதம் ஆகிறது. மேற்கிந்திய தீவுகள் தொடரிலும் இவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக விளையாட முடியவில்லை. காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இவர் குணமடையமாட்டார் என மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஜிம்பாப்வே மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

ஜஸ்பிரீத் பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவரும் ஆசிய கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக குணமடைவது சாத்தியம் இல்லை என்பதால் ஜிம்பாப்வே மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. பந்துவீச்சில் இரண்டு முக்கிய வீரர்கள் ஓய்வில் இருப்பது சற்று பின்னடைவை கொடுக்கலாம்.

ஆசிய கோப்பைக்கு செல்லும் இந்திய வீரர்கள் பட்டியல்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான்.

காத்திருப்பு பட்டியல்: ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் மற்றும் அக்சர் படேல்.