உள்நாட்டுப் போட்டிகளில் கூட விளையாடாமல் ஐபிஎல்-ல் பெங்களூருக்கு எதிராக கலக்கிய சுயாஸ் ஷர்மா யார்?

0
131
KKR

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சர்துல் தாக்கூர் விளையாடிய மேஜிக் ஆட்டத்தால் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது!

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு முதல் ஆட்டம் முதல் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்தபட்ச ஸ்கோரான 49 ரன் பெங்களூருக்கு கொல்கத்தாவுக்கு எதிராகத்தான் வந்தது!

- Advertisement -

நேற்றைய போட்டியில் 11.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணியை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் 24 ரன்கள் அடிக்க விட்டது பெங்களூர். சர்துல் தாக்கூர் பேட்டிங்கில் பெங்களூருக்கு பிரச்சனையை ஏற்படுத்தினார் என்றால் பந்துவீச்சில் உள்நாட்டுப் போட்டிகளில் கூட விளையாடி இருக்காத 19 வயது இளம் வீரர் சுயாஸ் சர்மா பிரச்சனையை ஏற்படுத்தினார்.

நேற்றைய போட்டியில் வெங்கடேசுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் வந்த டெல்லியைச் சேர்ந்த 19 வயதான வலதுகை லெக் ஸ்பின்னர் சுயாஸ் சர்மா நேற்று 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து தினேஷ் கார்த்திக், அனுஜ்ராவத் மற்றும் கரண் சர்மா ஆகிய மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இவர் டெல்லியில் கிளப் போட்டிகளில் விளையாடக் கூடியவர். மேலும் டெல்லியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் விளையாடி வரக்கூடியவர். இதுவரை எந்த ஒரு முக்கியமான பெரிய போட்டிகளிலும் குறிப்பாக டெல்லி மாநில அணிக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ், லிப்ட் ஏ, டி20 போட்டிகளில் விளையாடாதவர்.

- Advertisement -

கொல்கத்தா நடத்திய புதிய இந்திய வீரர்களை கண்டறிவதற்கான முகாமில் கலந்து கொண்டு வந்து வீசிய இவர் ஆரம்பத்திலேயே அவர்களை ஈர்த்து, இந்த வருடம் மினி ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு அணிக்குள் வந்து விட்டார். அணியின் கேப்டன் நிதிஷ் ரானா இவரைப் பற்றி சொல்லும் பொழுது “இவர் பயிற்சி முகாமில் பந்து வீசும் பொழுதே மூன்றாவது ஸ்பின்னருக்கு இவர் சரியானவர் இவர் அணியில் விளையாடுவார் என்று நினைத்தேன்!” என்று கூறி இருக்கிறார்.

இவரைப் பற்றி கொல்கத்தா தலைமை பயிற்சியாளர் கூறும் பொழுது ” இவரிடம் பந்துவீச்சில் நல்ல வேகம் இருக்கிறது அதனால் இவரை கணிப்பது கடினமாக இருக்கிறது. இவர் உள்நாட்டுப் போட்டிகளில் கூட விளையாடாதவராக இருந்தாலும் இவரிடம் மோதிப் பார்க்கும் ஒரு அணுகுமுறை இருக்கிறது. அதனால் இவரை விளையாட வைத்தோம்!” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

இரண்டு அணிகள் அதிகமாக இருப்பதும், சர்வதேச அளவில் நல்ல வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதும், இம்பேக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதும், ஐபிஎல் தொடரில் புதிய இளம் இந்திய வீரர்களுக்கான தேவையை அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது இதனால் நிறைய இளம் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்குள் வருவது மட்டுமில்லாமல் விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!