“விராட் கோலியை விமர்சிப்பதற்கு அவர்கள் யார்….. ? பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் அதிரடி!

0
3253

பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து நான்காவது முறையாக கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலியும் தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தப் போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 28 வது சதத்தையும் சர்வதேச போட்டிகளில் தனது 75 ஆவது சதத்தையும் நிறைவு செய்தார். 384 பந்துகளை சந்தித்து ஆடிய விராட் கோலி 186 ரன்களை எடுத்திருந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.

- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களாக அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி சதம் எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் .

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளரும் விராட் கோலியின் தீவிர ஆதரவாளருமான முகமது அமீர் விராட் கோலியை விமர்சித்தவர்களை தனது பேட்டியின் மூலம் கடுமையாக சாடியிருக்கிறார். இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அவர் “கோலியை விமர்சிக்க இவர்கள் யார் ? உண்மையாகவே எனக்கு புரியவில்லை அவர் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள்” என்று என கேள்வி எழுப்பி உள்ளார் .

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் “விராட் கோலி ஒன்றும் ரிமோட் வைத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடவில்லை பட்டனை அழுத்தினால் செஞ்சுரி வருவதற்கு” என தெரிவித்திருக்கிறார், “இந்தியாவிற்காக அவர் வென்று கொடுத்திருக்கும் போட்டிகளை மறந்து விடக்கூடாது”எனவும் கூறியுள்ளார். மேலும் இது பற்றி பேசுகையில் ” ஒவ்வொரு வீரருக்கும் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் என்பது இருக்கும். எனக்கு நன்றாக தெரியும் நான் சில நாட்களில் நன்றாகத் தான் பந்து வீசுவேன் ஆனால் அந்த நாளில் என்னால் விக்கெட் எதுவும் எடுக்க முடியாது அதேபோன்று பல நாட்கள அமையலாம். மேலும் சில நாட்களில் மிகவும் மோசமாக பந்து வீசுவேன். அப்போது ஒரு ஃபுல் டாஸ் கூட எனக்கு ஒரு விக்கெட்டை எடுத்து தரும். கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் என்பது முக்கியமான ஒன்று” என தெரிவித்தார்.

- Advertisement -

விராட் கோலி பற்றி தொடர்ந்து பேசிய அமீர் “கோலியினுடைய கடின உழைப்பை நாம் என்றுமே சந்தேகப்படக் கூடாது. அவர் தனது கிரிக்கெட்டிற்காக கடுமையாக உழைக்கக் கூடியவர். அவருக்கு சவால்களை சந்திப்பது மிகவும் விருப்பமான ஒன்று. ஒவ்வொரு முறையும் அவர் விமர்சிக்கப்படும் போது அவர் தன்னை நிரூபித்து தன்னை விமர்சித்தவர்களின் விமர்சனங்களை தவறு என நிரூபித்திருக்கிறார். அதுபோலவே இப்போதும் மீண்டு வந்துள்ளார்” என தெரிவித்திருக்கிறார் அமீர்.

2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை போட்டிகளின் போது முகமது அமீரின் அபாரமான பந்துவீச்சினால் ஈர்க்கப்பட்டார் விராட் கோலி. அவரது பந்துவீச்சை பாராட்டி அவருக்கு தனது கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து இரண்டு வீரர்களும் தங்களுக்கிடையிலான நட்புறவை பாராட்டி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.