தினேஷ் கார்த்திக் வித்தியாசமான வடிவத்தில் ஹெல்மெட்டை பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?

0
11414
DK

தினேஷ் கார்த்திக்கின் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், அது மனரீதியாக தளர்ந்து இருக்கும் யாருக்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கையை தரக்கூடிய ஒரு பாடமாக இருக்கும். கடந்த வருடத்தில் இங்கிலாந்தில் கிரிக்கெட் வர்ணனை செய்த ஒரு வீரர், இன்று டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிரதான விக்கெட் கீப்பராக இடம் பிடித்திருக்கிறார் என்பது சாதாரண விஷயம் கிடையாது!

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்குக்கு, கடைசி சில ஓவர்களில் தாக்கி ஆடும் ஃபினிஷர் ரோல் தரப்பட்டது. பெங்களூர் அணியின் இந்த முடிவுதான் எல்லாவற்றையும் அவரது வாழ்க்கையில் மொத்தமாக மாற்றியது என்றே கூறலாம். அவரும் டி20 கிரிக்கெட்டில் தன்னை ஒரு பினிஷராக வைத்துக் கொள்வதற்கு தேவையான எல்லா வகையான பயிற்சிகளையும் மேற்கொண்டு தயாராக இருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பித்து தினேஷ் கார்த்திக் தன் திறமையை வெளிப்படுத்தும் வேளையும் வந்தபொழுது, எல்லாம் பொருந்தி போக அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு செயல்பாட்டை, ஒரு தர நிர்ணயத்தை அவருக்கென உருவாக்கி காட்டினார். இது அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது. மேலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பலமாக இருந்த போதும், மிடில் ஆர்டரும் பினிஷிங் செய்யவும் சரியான வீரர்கள் இல்லாது போனது மற்றும் இவர் அனுபவ வீரராக இருந்ததோடு பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படுவதால், இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார்.

நேற்று 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெற்றது. இதில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் வீச, முதல் பந்தை சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் அடித்து மிக எளிதாக ஆட்டத்தை முடித்து வைத்தார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக்கின் திடீர் எழுச்சியும், அவர் இறுதி நேரத்தில் அபாரமாக ஆடும் முறையும் எவ்வளவு கவனத்தை ரசிகர்களிடம் ஈர்த்திருக்கிறதோ, அதே அளவுக்கு தினேஷ் கார்த்திக் பயன்படுத்தும் புது ஹெல்மெட்டும் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் வித்தியாசமான முறையில் மற்ற வீரர்களை அணியும் ஹெல்மெட் போல் அல்லாது வேறொரு வடிவத்தில் ஹெல்மெட்டை பயன்படுத்துவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

மேல்புறம் உயரமாக இல்லாமல் தட்டையாகவும், பக்கவாட்டில் நிறைய துளைகளை கொண்டும் உள்ள இந்த ஹெல்மெட் காற்றோட்ட வசதியானது. தலையில் உருவாகும் வியர்வையை வெளியேற்ற வசதியானது. இந்த ஹெல்மெட்டில் கூடுதலாக சில பாதுகாப்பு கம்பிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டும் இல்லாமல் இந்த ஹெல்மெட்இலகுவானது எடை குறைந்தது. தலையில் அணிந்திருக்கும் பொழுது அங்குமிங்கும் அசையாதது. இதனால் எது ஒன்றையும் சிரமமில்லாமல் தெளிவாக பார்ப்பதற்கு வசதியாகவும் இருக்கும். இப்படியான காரணங்களால் இந்த வகையான ஹெல்மெட்டை தினேஷ் கார்த்திக் பயன்படுத்துகிறார்.

மேலும் தற்போதைய இந்திய அணிக்கு வெளிர் நீல நிற வண்ணத்தில் உடை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்கள் அடர் நீல நிற ஹெல்மெட்டையே பயன்படுத்தி வருகிறார்கள். தினேஷ் கார்த்திக் இதிலும் ஒரு மாற்றமாக, ஆடையின் வண்ணத்தை ஒத்த வெளிர் நீல நிற ஹெல்மெட்டையே பயன்படுத்துகிறார். மேலும் இந்த வகையான ஹெல்மெட்டை சர்வதேச போட்டிகளில் சங்கக்கரா, ஜேம்ஸ் டெய்லர், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். இந்திய வீரர்களில் ராகுல் திரிபாதி இத்தகைய ஹெல்மெட்டை பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.