“நானும் ராகுல் டிராவிட்டும் என்ன திட்டம் போட்டு இருக்கோம்? அவர் சொன்ன கண்டிஷன் இதுதான்” – ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
438
Rohit

2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தத் தொடரின் முடிவுக்கு பின்னால் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் நிறைய!

குறிப்பிட்ட அந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறி வந்தது. விராட் கோலிக்கு இந்திய டி20 அணியின் கேப்டனாக அதுவே கடைசி தொடர். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு அதுவே கடைசி தொடர்.

- Advertisement -

அந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, இந்திய கிரிக்கெட்டில் பெரிய அதிர்வலைகள் உண்டானது. இதற்கு அடுத்து இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றி அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு புதிய வீரர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இந்திய அணி புதிய வீரர்களை அதிகம் உள்வாங்க ஆரம்பித்ததின் முதல் புள்ளி அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது!

இதற்கு அடுத்து கேப்டனாக மூன்று வடிவத்திற்கும் ரோஹித் சர்மா வருகிறார். அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் வேண்டுகோளுக்கு இணங்கி தலைமை பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக்கொள்கிறார்.

ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணியின் மீது இந்திய ரசிகர்களுக்கு விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் இந்த வெற்றி தோல்வி விமர்சனங்களை தாண்டி, இந்தக் கூட்டணி நிறைய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. நாளைய இந்திய அணிக்கான அடிப்படையை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

தனக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்குமான நட்பு எப்படியானது? என்று பேசி உள்ள ரோஹித் சர்மா “நான் முதலில் அவரை ஒரு மனிதர் என்பதற்காகவும் பின்பு சிறந்த கிரிக்கெட் என்பதற்காகவும் மிகவும் மதிக்கிறேன். இதற்குக் காரணம் நீங்கள் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் நல்ல மருத்துவர், நல்ல கால்பந்தாட்ட வீரர், நல்ல கிரிக்கெட் வீரர் என்பதெல்லாம்.

நான் அவருடைய தலைமையின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். ஆனால் நீண்ட காலம் விளையாடவில்லை. அணியின் கடைசி துணை நிலை ஊழியர்கள் வரை கூட தொடர்பில்லாமல் இருக்கக் கூடாது. எல்லோருடனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய முதல் கண்டிஷன்.

நாங்கள் வெளிப்படையான ஒரு திறந்த நட்பை கொண்டிருக்கிறோம். அங்கு நாங்கள் அணியின் வீரர்கள் மற்றும் எங்களுடைய வியூகங்கள் பற்றி விவாதிப்போம். பேட்டிங் போது பந்துவீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார்? கண்டிஷன் எப்படி இருக்கிறது? எதிரணி வீரர்கள் யார்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என்பது பற்றி திட்டங்கள் அமைக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!