தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ செப்பர்டு ஆட்டநாயகன் விருதையும், சாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்ற நிலையில்,மழையின் காரணமாக போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பத்து வீச தீர்மானித்தது. இதில் முதலில் பேட்டிங் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 13 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தென்னாபிரிக்காவின் மிடில் வரிசையில் களமிறங்கிய ஸ்டெப்ஸ் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் மார்க்ரம் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 20 ரன்கள் குவித்தார். இதில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் செப்பர்டு இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அதான்செ இந்த போட்டியில் ஒரு ரன்னில் வெளியேறினாலும், சாய் ஹோப் இந்த முறையும் சிறப்பாக விளையாடினார். 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் குவித்தார். இவரோடு மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான பூரான் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி நான்கு சிக்சர்கள் உடன் 269 ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ரன்கள் குவிக்க, இறுதியில் ஹெட்மயர் 17 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இந்த கூட்டணி வெஸ்ட் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 9.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணியை முழுமையாக ஒயிட் வாஸ் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு டி20 மூலமாக பதிலடி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க:2 வருஷம் வாய்ப்பு இல்ல.. திரும்பி வர்ரப்போ இதைத்தான் நினைச்சேன்.. சின்ன வயசுல இருந்து இது என்னோட கனவு – கமிந்து மெண்டிஸ் பேட்டி
முன்னணி அணியான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றி அந்த அணியின் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தி இருக்கும். இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திய செப்பர்டு ஆட்டநாயகன் விருதையும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.