இலங்கை அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இருப்பினும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தி இருந்தார். இந்த நிலையில் இலங்கை அணியில் விளையாட தான் பெற்ற வாய்ப்பு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் 12 ரன்கள் வெளியேறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அணியின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். இரண்டாவது இன்னிங்சில் 183 பந்துகளை எதிர் கொண்டு 15 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 113 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். சொந்த மண்ணில் சதம் அடிப்பதை விட வெளிநாட்டு மண்ணில் சதம் அடிப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.
கமிந்து மெண்டிஸ் கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் தற்போதைய இலங்கை அணியின் கேப்டன் ஆக திகழும் தனஞ்செயாவுக்கு பதிலாக அறிமுகமாகி அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். தனஞ்செயாவுக்கு அப்போது ஏற்பட்டிருந்த கோவிட்டால் அவர் விளையாடவில்லை. அதற்குப் பிறகு கமிந்து வாய்ப்பு கிடைக்காத நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தற்போதைய தொடரில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
இது குறித்து கமிந்து மெண்டிஸ் என்று கூறும் போது “இலங்கை அணியில் அதிக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் செய்ய முயற்சிப்பது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு என்னை நிரூபிக்க வேண்டும் என்றுதான். தனஞ்செயா வந்த பிறகு அணியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் நான் அதை தவறாக பார்க்கவில்லை. ஒரு அணியை சமநிலைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தனஞ்செயாவுக்கு கோவிட் இருந்த காரணத்தால்தான் எனக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் திரும்பி வந்ததும் நான் அணியை விட்டு விலக வேண்டி இருந்தது அதுதான் நியாயமும் கூட. எனது சிறு வயதிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. இது எனது கனவு மட்டும் அல்ல கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:கம்பீரின் கனவு பிளான்.. சுனில் நரைன் போல தமிழகத்தில் பந்து வீசிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தொடரும் பரிசோதனை
இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அது எங்களுக்கு சிறப்பான தருணமாக இருக்கும்” என்று கமிந்து மெண்டிஸ் கூறி இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 29ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.