வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 26 பந்துகள் மீதும் வைத்து வெற்றி பெற்று இருக்கிறது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்
நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மந்தனா அபாரமாக விளையாடி 41 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ரிச்சா கோஸ் 17 பந்துகளில் 6 பௌண்டரியுடன் 32 ரன்கள் குவித்தார்.
மற்ற வீராங்கனைகள் அனைவரும் குறைந்த ரன்னில் வெளியேறியதால் இந்திய அணி 159 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிதரப்பில் பந்துவீச்சில் ஹென்றி, டாட்டின், மேத்யூஸ் மற்றும் ப்ளக்சர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹீலி மேத்யூஸ் மற்றும் ஜோசப் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அபாரம்
இதில் அதிரடி வீராங்கனை ஹீலி மேத்யூஸ் அதிரடியான ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தார். 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 17 பவுண்டரிகள் விளாசித் தள்ளி 85 ரன்கள் குவித்தார்.180.85 ஸ்டிரைக் ரேட்டில் அற்புதமாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை முற்றிலுமாக அடித்து நொறுக்கினார். அவருக்கு பக்கபலமாக இருந்த மற்றொரு தொடக்க வீராங்கனை ஜோசப் 22 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 38 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:கேரள அணியில் நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. ஆச்சரிய விளக்கம் கொடுத்த மூத்த அதிகாரி.. விஜய் ஹசாரே டிராபி 2025
அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேம்பே 26 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரியுடன் 29 ரன்கள் அடித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 160 ரன்கள் குவித்து 26 பந்துகளை மீதம் வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது. தொடரை நிர்ணயிக்கப் போகும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வருகிறது வியாழக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.