நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், ஆட்டநாயகன் விருது பெற்ற திலக் வருமா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வென்ற திலக் வர்மா பேசும்போது “5 விக்கெட்டுகள் விழுந்த போது கடைசி வரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் கெளதம் சார் மற்றும் சித்தான்ஷு கோட்டக் சார் ஆகிய இருவரிடமும் பேசினேன். அப்போது அவர்கள் இருவரும் இந்திய அணியும் ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னை நம்புகிறது என்றும், நீ கடைசி வரை களத்தில் இருந்தால் கண்டிப்பான முறையில் போட்டியை முடித்து தருவாய் என்றும் கூறினார்கள். அது மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. போட்டியினை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல விரும்பினேன். அனைவரும் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் இருவரும் கடைசி வரை நிற்க வேண்டும் என்று நமன் தீரிடம் கூறினேன். கடந்த போட்டியை விட இந்த போட்டியில் விக்கெட் சற்றே ஸ்லோவாக இருந்தது. எனவே ஸ்பின்னர்கள் பந்துவீசும் போது சிங்கிள் மற்றும் டபுள்ஸ் ஓடி ரன்களை உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். நாங்கள் நினைத்தது போலவே சிறப்பாக ரன் ஓடினோம். மிட்செல் சாண்ட்னர் வீசிய கடைசி ஓவரில் துரதிர்ஷ்டவசமாக நமன் தீர் விக்கெட்டை இழந்தார். இல்லையெனில் 18வது ஓவரிலேயே போட்டியை முடித்திருப்போம். நமன் தீர் பேட்டிங் செய்த விதமும் பாராட்டுக்குரியது. அதற்கு பிறகு ஹைதராபாத் பாய்ஸ் ஆன நிதீஷ் ரெட்டி மற்றும் நான் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஸ்பின்னர்களை எதிர்கொண்டது குறித்து பேசிய அவர் “ஸ்பின்னர்கள் எங்களது ஏரியாவில் பந்தை வீசினால் மட்டுமே அட்டாக்கிங் செய்ய வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தோம். மற்றபடி பந்தை கேப்பில் தட்டிவிட்டு வேகமாக ரன் ஓட முடிவு செய்தோம். அதேபோல ஸ்பின்னர்கள் ஓவரில் 4 முதல் 5 முறை இரண்டு ரன்கள் எடுத்தோம். அந்த 8 முதல் 10 ரன்கள் மிகவும் முக்கியமானது. நாங்கள் புத்திசாலித்தனமாக விளையாடினோம்” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக அவர் கூறும்போது “பெரிய மைதானம் என்பதால் ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை பயன்படுத்தி சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே அந்த ஓவர்களுக்காக காத்திருந்து இறுதியில் மாஸாக போட்டியை முடித்தோம்” என்று கூறி இருக்கிறார்.






